Last Updated : 24 Nov, 2014 06:07 PM

 

Published : 24 Nov 2014 06:07 PM
Last Updated : 24 Nov 2014 06:07 PM

முறையற்ற பந்துவீச்சின் மீதான நடவடிக்கை ‘சதி’ அல்ல: ஐசிசி

பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை விட்டெறிவதன் மீதான ஐசிசி நடவடிக்கையில் சதி எதுவும் இல்லை என்று தலைமைச் செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

2015 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இத்தகைய தருணத்தில் அணிகளின் முன்னணி பவுலர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் மீது இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுவதில் ‘சதி’ நடப்பதாக கிரிக்கெட் அரங்கில் சந்தேகங்கள் எழுந்தது.

இந்நிலையில் ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறும்போது, “விதிமுறைகளை ‘வளைக்கும்’ (சிலேடைக்கு மன்னிக்கவும்) பவுலர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தீவிரமாக கட்டுப்படுத்தும் ஒரு கட்டத்தை நாம் எட்டிவிட்டோம். முறையற்ற பந்து வீச்சிற்காக புகார் அளிக்கப்பட்ட பவுலர்கள் தங்கள் பந்து வீச்சை சரிசெய்து கொள்ள மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது. மேலும், முறையற்ற, சந்தேகத்திற்கிடமான பந்து வீச்சு கொண்ட பவுலர்களை அணியில் எடுக்க வேண்டாம் என்ற செய்தி தற்போது கிரிக்கெட் வாரியங்களின் காதுகளில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

ஹர்பஜன் சிங்கை எடுத்துக் கொள்ளுங்கள், அவரது பந்து வீச்சு குறித்து இருமுறை புகார் எழுந்தன. விதிமுறைகளுக்கு ஏற்ப அவர் தனது பந்து வீச்சை மாற்றி அமைத்துக் கொண்டு தற்போது விதிமுறைகளுக்கு இணங்க வீசி வருகிறார். இப்போது அவர் பந்து வீச்சு மீது எந்த கேள்விகளும் இல்லை. ஆம்! ஐசிசி முறையற்ற பந்து வீச்சு மீது நடவடிக்கை எடுக்கிறது. அது எடுக்கப்படும் காலகட்டத்தை பற்றிய சதிக் கோட்பாடு எதுவும் இல்லை” என்று 2015 உலகக் கோப்பைக்கான அதிகாரபூர்வ டைம் கீப்பராக ஆடம்பர வாட்ச் பிராண்ட் ஹப்லாட் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் டேவ் ரிச்சர்ட்சனுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட ஹர்பஜன் சிங், கூறும்போது, “ஒருமுறை அல்ல, இருமுறை என் பந்து வீச்சு மீது புகார் அளிக்கப்பட்டன. 1999 ஆம் ஆண்டு நான் கிரிக்கெட் வாழ்வில் நுழைந்த தருணம் பிறகு 2006ஆம் ஆண்டு என்று இருமுறை என் பந்து வீச்சு மீது சந்தேகப்புகார்கள் எழுந்தன. எனவே பவுலர் எந்த அளவுக்கு முழங்கையை மடக்கலாம் என்பதை வரையறை செய்துள்ளது, அதனை மீறும் பவுலர்கள் தங்களை கவனித்து வருகின்றனர் என்பதை உணர வேண்டும்.

எந்த வீரரையும் கிரிக்கெட் ஆட்டத்தை நிறுத்தக் கோரவில்லை இந்நடவடிக்கைகள். மாறாக, திருத்திக் கொள்ள வழிமுறைகளை அளிக்கிறது.

எனவே புகார் செய்யப்பட்ட பவுலர்களுக்கு கதவுகள் அடைக்கப்படுவதாக கருதப்படக்கூடாது. வரையறைக்குள் தூஸ்ரா அல்லது எந்த ஒரு தினுசான பந்தையும் வீசலாம். ஆகவே, ஐசிசி-யின் இந்த முயற்சி கிரிக்கெட்டின் நன்மைக்கே.” என்றார் ஹர்பஜன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x