

இந்தியாவில் பாட்மிண்டன் என்றாலே நம் அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது சாய்னா நெவால்தான். ஆனால் இப்போது அவரையும் தாண்டி அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறார் சாய்னா வசிக்கும் அதே ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த். குறுகிய காலத்தில் அவர் கண்ட அசுர வளர்ச்சியும், சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் அவர் வென்ற சாம்பியன் பட்டமும்தான் இன்றைக்கு அவருடைய புகழை நாடறிய செய்திருக்கிறது.
சீன மண்ணில் நடைபெறும் பாட்மிண்டன் போட்டியில் பட்டம் வெல்வது அவ்வளவு எளிதா? நிச்சயம் இல்லை என்பதை பாட்மிண்டனைப் பற்றி தெரிந்த அனைவருமே உணர்ந்திருப்பார்கள். ஏனெனில் சர்வதேச பாட்மிண்டனில் ஆதிக்கம் செலுத்தும் பெரும்பாலானோர் சீனர்கள்தான். அப்படிப்பட்ட பாட்மிண்டன் பாரம்பரியமிக்க சீனாவில் நடைபெற்ற சீன ஓபனில் அந்நாட்டின் முன்னணி வீரரான லின் டானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச பாட்மிண்டனில் தனது சவாலை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
லின் டான் சாதாரண வீரர் அல்ல. நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அவர், 2008 ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் வென்றார். இதுதவிர 5 உலக சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கிறார். இப்படிப்பட்ட பலம் பொருந்திய ஒருவரை அவருடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய அனுபவ வீரரான லின் டானுக்கு எவ்வளவு ஆதரவு இருந்திருக்கும், அந்த ஆதரவு ஸ்ரீகாந்துக்கு எவ்வளவு நெருக்கடியை தந்திருக்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டி இளம் வீரரான ஸ்ரீகாந்த் வெற்றி கண்டிருப்பதுதான் சாதனை.
சோதனையை வென்ற ஸ்ரீகாந்த்
4 மாதங்களுக்கு முன்பு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த ஸ்ரீகாந்த், இப்போது மகத்தான வெற்றியைப் பெற்றிருப்பதின் மூலம் சமீபத்தில் தான் சந்தித்த சோதனையையும், வேதனையையும் வென்றுள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு அகாடமியின் குளியலறையில் உணர்விழந்து கிடந்தார் ஸ்ரீகாந்த். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தபோது அதிர்ச்சியில் உறைந்தது அவருடைய குடும்பம். ஆனாலும் இறைவனின் அருளாலும், மருத்துவர்களின் செயலாலும் விரைவாக உடல் நலம்பெற்ற ஸ்ரீகாந்த், இப்போது நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
திருப்புமுனை
விவசாயி மகனான ஸ்ரீகாந்துக்கு வெற்றி சாத்தியமானது எப்படி?
2008-ல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாதுக்கு இடம்பெயர்ந்தார் ஸ்ரீகாந்த். அங்குள்ள புல்லேலா கோபிசந்தின் பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெறுவதற்காக ஸ்ரீகாந்தை சேர்த்தார் அவருடைய தந்தை. அதே அகாடமியில்தான் ஸ்ரீகாந்தின் சகோதரர் நந்தகோபாலும் பயிற்சி பெற்று வந்தார்.
ஆரம்பத்தில் ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பயிற்சி பெற்ற ஸ்ரீகாந்த், 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒற்றையர் பிரிவுக்கு மாறினார். அதுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த தருணம். அதன்பிறகு யாரும் நினைத்து பார்க்காத அளவுக்கு அசுர வளர்ச்சி காண ஆரம்பித்தார் ஸ்ரீகாந்த்.
தரவரிசையில் அசுர வளர்ச்சி
2012-ல் சர்வதேச தரவரிசையில் 240-வது இடத்தில் இருந்த ஸ்ரீகாந்துக்கு 2013-ம் ஆண்டு ஏற்றமிக ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில் தாய்லாந்து கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டியில் உள்ளூர் வீரரும், சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்தவருமான பூன்சாக் பொன்சாவை தோற்கடித்து சாம்பியன் ஆனதோடு, சர்வதேச தரவரிசையில் 13-வது இடத்துக்கு முன்னேறினார். இதுதவிர தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் காஷ்யப்பை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
பின்னர் நடைபெற்ற இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் அசத்தலாக ஆடிய ஸ்ரீகாந்த், இப்போது சீன ஓபன் சூப்பர் சீரிஸ் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த வெற்றியால் சர்வதேச தரவரிசையில் முதல்முறையாக 10-வது இடத்தைப் பிடித்திருக்கும் ஸ்ரீகாந்த், பயிற்சியாளர் கோபிசந்தின் நம்பிக்கைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
கனவு நனவானது
சீன வீரரான லின் டானை அவருடைய சொந்த மண்ணில் நடைபெறும் இறுதிப் போட்டியில் வீழ்த்த வேண்டும் என்பதுதான் ஸ்ரீகாந்தின் இளம் வயது கனவு. சீன ஓபன் போட்டியில் வென்றதன் மூலம் தனது கனவை நனவாக்கியிருக்கும் ஸ்ரீகாந்த், சர்வதேச பாட்மிண்டனில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார். தனது பயிற்சியாளர் கோபிசந்தைப் போல ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஸ்ரீகாந்த் பட்டம் வெல்வாரா? அது நடக்குமானால் ஸ்ரீகாந்துக்கு மட்டுமல்ல, கோபிசந்துக்கும் அது மிகப்பெரிய மகுடமாக அமையும்.