Last Updated : 27 Nov, 2014 11:44 AM

 

Published : 27 Nov 2014 11:44 AM
Last Updated : 27 Nov 2014 11:44 AM

வாலிபால் சங்க அலுவலகத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

கடந்த 3 மாதங்களாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் தமிழக வாலிபால் சங்க அலுவலகத்தைத் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாலிபால் ஆர்வலர்களும், வீரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த செப்டம்பரில் இலங்கையில் நடைபெற்ற ஆசிய இளையோர் வாலிபால் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் தமிழக வீரர்கள் இருவர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் இலங்கை சென்ற நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே அவர்களை திரும்ப அழைத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), சென்னை நேரு மைதானத்தில் உள்ள தமிழ்நாடு வாலிபால் சங்க அலுவலகத்துக்கும் சீல் வைத்தது. இதனால் கடந்த 3 மாதங்களாக அலுவலக பணிகளை மேற்கொள்ள முடியாமல் வாலிபால் சங்க நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.

தேசிய சாம்பியன்ஷிப்

63-வது தேசிய அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜனவரி 3 முதல் 11-ம் தேதி வரை சென்னை நேரு மைதானம் மற்றும் உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. அந்த சமயத்தில் அலுவலகம் மூடப்பட்டிருந்தால் போட்டி தொடர்பான பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

தேசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும்போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தமிழகத்துக்கு வருவார்கள். அப்போது அலுவலகம் திறக்கப்படாமல் இருந்தால் தமிழக வாலிபால் சங்கத்துக்கு அவப்பெயர்தான் மிஞ்சும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் எதிர்காலங்களில் தேசிய அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போன்ற கவுரவமிக்க போட்டிகளை நடத்தும் வாய்ப்பு தமிழகத்துக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் தமிழக வீரர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கவலை தெரிவிக்கின்றனர் வாலிபால் ஆர்வலர்கள்.

தமிழக வீரர்கள் தன்னிச்சையாக இலங்கைக்கு விளையாட செல்லவில்லை. இலங்கையில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில்தான் இடம்பெற்றிருந்தார்கள். எஸ்டிஏடியின் உத்தரவைத் தொடர்ந்து ஒரு போட்டியில் கூட விளையாடாமல் நாடு திரும்பிவிட்டனர். அப்படியிருக்கை யில் வாலிபால் சங்கத்தை தொடர்ந்து மூடி வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? அலுவலகத்தை மூடிவைத்தால் விளையாட்டுப் போட்டிகளை எப்படி நடத்த முடியும்?

சர்வதேச அளவிலான போட்டிகள் என்று வரும்போது அது வெவ்வேறு நாடுகளில்தான் நடத்தப்படும். அது எங்கு நடத்தப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட சம்மேளனங்களும், உலகளாவிய விளையாட்டு அமைப்புகளும்தான் முடிவு செய்யும். மாறாக தனிப்பட்ட ஒருவரோ, வீரர்களோ முடிவு செய்ய முடியாது. ஒலிம்பிக் போட்டியோ, காமன்வெல்த் போட்டியோ இலங்கையில் நடைபெறுமானால் அதில் பங்கேற்காமல் புறக்கணிக்க முடியுமா என வாலிபால் வீரர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்

தமிழகத்தில் விளையாட்டை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமே வாலிபால் சங்க அலுவலகத்தை மூடி வைத்திருப்பது தமிழக விளையாட்டு வீரர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வாலிபால் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “வாலிபால் சங்க அலுவலகத்தை திறந்துவிடக்கோரி எஸ்டிஏடியிடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இது தொடர்பாக முந்தைய உறுப்பினர்-செயலரை சந்திக்க பல முறை முயற்சி மேற்கொண்டும் அவர் எங்களை சந்திக்கவில்லை. தற்போது புதிதாக வந்திருக்கும் உறுப்பினர்-செயலர் ஷம்பு கலோலிகரை சந்தித்து எங்கள் பிரச்சினைகளை கூறியிருக்கிறோம். அவர் இது தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார். அலுவலகத்தை திறப்பதற்கான முயற்சியை அவர் எடுப்பார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்” என்றார்.

விளையாட்டு வீரர்களுக்காக ஆண்டு தோறும் பல கோடி ரூபாயை ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தற்போதைய தமிழக அரசு, வாலிபால் சங்கத்தை திறந்துவிடுவதற்கும், தேசிய அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சிறப்பாக நடைபெறுவதற்கும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே வாலிபால் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x