Last Updated : 02 Apr, 2014 11:08 AM

 

Published : 02 Apr 2014 11:08 AM
Last Updated : 02 Apr 2014 11:08 AM

சென்னை லீக் கால்பந்து: கடைசி நிமிடத்தில் ஐசிஎப் த்ரில் வெற்றி

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ஐசிஎப் அணி கடைசி நிமிடத்தில் பெனால்டி கிக் மூலம் கோலடித்து 2-1 என்ற கோல் கணக்கில் சாய் அணியைத் தோற்கடித்தது. முதல் பாதி ஆட்டத்தில் சாய் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 2-வது பாதி ஆட்டத்தின் கடைசி 3 நிமிடங்களில் இரு கோல்களை அடித்து த்ரில் வெற்றி கண்டது ஐசிஎப்.

செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சீனியர் டிவிசன் லீக் ஆட்டத்தில் ஐசிஎப் அணியும், சாய் அணியும் மோதின. கடந்த முறை ஐசிஎப் அணிக்காக விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இந்த முறை இடம்பெறாதபோதும், சந்தோஷ் டிராபியில் தமிழக அணிக்காக விளையாடிய கார்த்திக் போன்ற வீரர்களின் வருகையால் அந்தகுறை தெரியவில்லை.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஐசிஎப் அணியின் சில கோல் வாய்ப்புகளை அற்புதமாகத் தகர்த்தார் சாய் கோல் கீப்பர் திவாகர்.

சாய் முன்னிலை

ஐசிஎப் அணியில் மிட்பீல்டர்களான கார்த்திக், நிர்மல் குமார், தடுப்பாட்டக்காரர் சுமன்ராஜ் அசத்தலாக விளைாடிய அதேவேளையில், ஸ்டிரைக்கர் ஃபிரெட்டி பல நல்ல கோல் வாய்ப்புகளை தொடர்ந்து கோட்டைவிட்டுக் கொண்டிருந்தார். சுமார் 30-வது நிமிடத்தில் வலது பகுதியில் இருந்த நிர்மல் குமார் கார்த்தியை நோக்கி பந்தை பாஸ் செய்ய, அவர் தலையால் முட்டி ஃபிரெட்டிக்கு பந்தைத் திருப்பினார். ஆனால் ஃபிரெட்டி கோல் கம்பத்துக்கு மேலே பந்தை தூக்கியடித்து வீணடித்தார்.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஐசிஎப், முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் சாயிடம் பந்தைக் கொடுத்தது. ஐசிஎப் தடுப்பாட்டக்காரர் ஜான் கார்லோ, பந்தை கைப்பற்ற எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் இடது எல்லையில் இருந்து சாய் வீரர் விஜய பிரபாகரன் கோல் கம்பத்தை நோக்கி பந்தை தூக்கியடிக்க, அது தரையில் விழுவதற்கு முன்னதாகவே அந்த அணியின் வலது மிட்பீல்டர் கரிமுல்லா சூப்பராக கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சாய் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து சொதப்பிய ஐசிஎப்

2-வது பாதி ஆட்டத்திலும் ஐசிஎப் அணியே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி தொடர்ந்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அதை கோலாக மாற்றமுடியாமல் பலமுறை கோட்டைவிட்டது. குறிப்பாக ஃபிரெட்டியின் ஆட்டம் மிக மோசமாக அமைந்தது. ஐசிஎப் வீரர்கள் கோல் கம்பத்தின் அருகிலேயே பந்தை மாறிமாறி அடித்தபோதும், சாய் கோல் கீப்பரைத் தாண்டி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

இதன்பிறகு சாய் அணிக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தாலும், அதை அந்த அணி நூலிழையில் நழுவவிட்டது. அந்த அணியின் கரிமுல்லா கோல் கம்பத்தின் அருகே பந்தை கொண்டு வந்தார். இதனால் அவர் கோலடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேரடியாக கோலடிக்காமல் பந்தை அருகில் பாஸ் செய்ய முயன்றபோது, ஐசிஎப் அணி அந்த வாய்ப்பை முறியடித்தது.

அபாரமாக ஆடியபோதும் கோலடிக்க முடியாமல் போராடிய ஐசிஎப் அணி, ஒரு கட்டத்தில் ஸ்டிரைக்கர் டேவிட்டை வெளியேற்றிவிட்டு. அவருக்குப் பதிலாக சுரேஷ் குமாரை களத்தில் இறக்கியது. இதன்பிறகு சாய் வீரர் ஸ்ரீஹிகெட்டா, ஐசிஎப் வீரர் கார்த்தியை கீழே தள்ள, ஐசிஎப் அணிக்கு “இன்டைரக்ட்” பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த வாய்ப்பையும் ஃபிரெட்டி கோட்டைவிட்டார்.

கடைசி 3 நிமிடங்களில் இரு கோல்கள்

ஆட்டம் முடிவடைய 3 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், ஃபிரெட்டி கோலடித்தார். இதன்பிறகு இரு அணிகளுமே கோலடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கின. இரு அணி வீரர்களும் அபாரமாக ஆடினாலும், ஐசிஎப் வீரர் கார்த்திக் வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் ஆடினார். அவர் கடைசி நிமிடத்தில் பந்தை கோல் கம்பத்தை நோக்கி எடுத்துச் சென்றார்.

கோல் ஏரியாவுக்குள் (6 யார்ட் பாக்ஸ்) அவர் பந்தை எடுத்துச் சென்றபோது, சாய் வீரர் சஞ்சு தனது காலை நுழைத்து கார்த்திக்கை கீழே தள்ளினார். இதனால் ஐசிஎப் அணிக்கு 2-வது முறையாக பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சொதப்பிய ஃபிரெட்டி இந்த முறை அசத்தலாக கோலடிக்க, ஐசிஎப் 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது. பல நல்ல வாய்ப்புகளை வீணடித்த ஃபிரெட்டி, கடைசி நிமிடத்தில் கோல் அடித்து தனது அணியை தோல்வியிலிருந்து மீட்டதோடு, தனது மோசமான ஆட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

முதல் டிவிசன் ஆட்டம் டிரா

சென்னை எப்.சி.-மெட்ராஸ் யூத் பெஸ்டிவல் அணிகளுக்கு இடையிலான முதல் டிவிசன் லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சென்னை எப்.சி. தரப்பில் சந்தோஷ், அஜித் குமார் ஆகியோரும், மெட்ராஸ் யூத் பெஸ்டிவல் தரப்பில் சந்தோஷ், பிரசாந்த் ஆகியோரும் தலா ஒரு கோலடித்தனர்.

சூப்பர்மேன் திவாகர்

இந்த ஆட்டத்தைப் பொறுத்த வரையில் சாய் கோல் கீப்பர் திவாகர்தான் சூப்பர் ஸ்டார். அந்த அணி தோற்றிருந்தாலும்கூட, திவாகர் இல்லாவிட்டால் பல கோல்களை வாங்கியிருக்கும். ஐசிஎப்பின் பல கோல் வாய்ப்புகளை தகர்த்த அவர், கடைசி நேரத்தில் தனது அணியை தோல்வியிருந்து மீட்பதற்காக துணிச்சலாக கோல் கம்பத்தில் இருந்து களத்துக்குள் முன்னேறி வந்தார்.

அதன் உச்சகட்டமாக சாய் அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தபோது, திவாகர் எதிர்முனைக்கு வந்தார். எதிரணியின் கோல் கம்பத்தின் அருகில் வந்து நின்ற அவர் கார்னரில் இருந்து வந்த பந்தை அற்புதமாக கோல் கம்பத்தை நோக்கி திருப்பினார். ஆனால் துரதிருஷ்டவமாக அந்த வாய்ப்பு நழுவியது. கடைசி நிமிடங்களில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் எவ்வித தயக்கமும் இன்றி முன்னேறி வந்து விளையாடிய திவாகரின் ஆட்டம் மெய்சிலிர்க்க வைத்தது. அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x