Published : 03 Nov 2014 07:34 PM
Last Updated : 03 Nov 2014 07:34 PM

ஆஸி.தொடருக்கு ஜடேஜாவுக்கு பதில் கரன் சர்மா, லோகேஷ் ராகுலுக்கும் ஆதரவு: திராவிட் ஆலோசனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் லோகேஷ் ராகுலையும் கரன் சர்மாவையும் சேர்க்க வேண்டும் என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

கரன் சர்மா ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர், ஆஸ்திரேலியாவில் இத்தகைய ஸ்பின்னர்களுக்கு விக்கெட் விழ அதிக வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் வேகமாகவும், கூக்ளி வீசவும் முடிந்தால் ஆஸ்திரேலியாவில் சாதிக்கலாம். ஜடேஜா அவரால் முடிந்ததைச் செய்வதில் நன்றாகவே திகழ்ந்தார். விக்கெட் டு விக்கெட் வீசுவார். பின்னால் இறங்கி பயனுள்ள ரன்களை எடுப்பார். ஆனால் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டுமெனில் தரமான ரிஸ்ட் ஸ்பின்னர் தேவை.

கர்நாடகா பேட்ஸ்மென் லோகேஷ் ராகுல் உள்நாட்டு கிரிக்கெட்டில் இந்த சீசனில் 1000 ரன்களை எடுத்துள்ளார். துலிப் கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்துள்ளார். அவர் நல்ல பார்மில் உள்ளார், உண்மையில் அபாரமாக விளையாடுகிறார். ஒரு பேக்-அப் தொடக்க வீரராக வைத்துக் கொள்ளலாமே.

ஷிகர் தவனுக்கு இன்னொரு தொடர் வாய்ப்பு கொடுக்கலாம் என்றே கருதுகிறேன். புஜாரா, கோலி, ரஹானே, ரோகித் சர்மா ஆகியோரை இப்போது தொந்தரவு செய்யக்கூடாது. ரெய்னா இப்போதைக்கு இவர்கள் இடத்திற்கு வர முடியாது.

இந்த நால்வரின் குறைந்த சர்வதேச கிரிக்கெட் அனுபவத்திலும் தங்களால் என்ன முடியும் என்பதை காட்டியுள்ளனர். இவர்கள் உண்மையில் ஒரு சக்தி வாய்ந்த மிடில் ஆர்டராக மாறுவார்கள். அவர்களுக்கு அயல்நாட்டு மைதானத்தில் பிரச்சினை இருக்கிறது, ஆனால் அதற்காக ஒவ்வொரு அயல்நாட்டுத் தொடரிலும் வேறு வேறு வீரர்களை அழைத்துச் செல்வது நிச்சயம் உதவாது. இங்கிலாந்துக்குப் பிறகே இவர்கள் சிறப்பாக விளையாட வாய்ப்பு அளிக்கப் படவேண்டும்.

ஆஸ்திரேலியாவில் 6 பேட்ஸ்மென்கள் அவசியம் தேவை. அதே போல் மூன்று தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியம் தேவை. ஒரு தரமான ஸ்பின்னரும் தேவை. நல்ல ரன்களை எடுத்தால் 20 விக்கெட்டுகளை பந்து வீச்சாளர்கள் கைப்பற்றும்படியான அணிச் சேர்க்கைத் தேவை.

ஆஸ்திரேலிய பிட்ச், அங்கு பயன்படுத்தப்படும் குகபரா பந்து ஆகியவற்றிற்கு கொஞ்சம் வேகம் கூடுதல் தேவை. எனவே ஆரோன், உமேஷ் யாதவ் பங்களிப்பு உதவும்.

இளம் அணியாக இருக்கும் போது வெற்றி தோல்விகள் சகஜம்தான், ஆனால் இந்திய அணி நல்ல திசையில் செல்வதாகவே நான் கருதுகிறேன், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்தில் டெஸ்ட் வெற்றிக்கு அருகில் வந்தனர். இங்கிலாந்தில் ஒரு போட்டியில் அபார வெற்றி பெற்றனர். ஆனால் சீரான தன்மை இல்லை. ஆஸ்திரேலியாவில் இந்த அணி சிறப்பு பெறும் என்றே நான் கருதுகிறேன்.

இவ்வாறு கூறினார் திராவிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x