Last Updated : 14 Jul, 2019 08:24 PM

 

Published : 14 Jul 2019 08:24 PM
Last Updated : 14 Jul 2019 08:24 PM

இங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி?- ஆடுகளம்  மாறுமா?

பிளெங்கெட், ஆர்ச்சர், வோக்ஸ் ஆகியோரின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சால் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது நியூஸிலாந்து அணி.

டாஸ் வென்று பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இறுதிஆட்டத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்வது நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களின் கையில்தான் இருக்கிறது. இந்திய அணிக்கு எதிராகப் பந்துவீசியதுபோல் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை கழற்றிவிட்டால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் தொற்றிக்கொள்ளும். ஆட்டத்தை கடைசிவரை விறுவிறுப்பாகக் கொண்டு செல்லாம்.

டிரன்ட் போல்ட், ஹென்றி, பெர்குஷன் ஆகியோர் தங்களின் தொடக்க ஸ்பெல்லை எவ்வாறு வீசப்போகிறார்கள் என்பதில்தான் போட்டியின் சுவாரஸ்யம் நிறைந்திருக்கிறது.

ஆடுகளம் எப்படி?

2-வது பாதியில் சேஸிங் செய்வது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். அதிகமான ஸ்விங் ஆகும், பந்துகள் அதிகமாக பவுன்ஸ்ஆகாமல் வரும் என்பதால், பேட்ஸ்மேன்கள் விளையாடுவது கடினமாக இருக்கும். முதல் பேட்டிங்கைக் காட்டிலும் 2-வது பேட்டிங் செய்வது சிரமமாக இருக்கும் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்காமல் பேட் செய்வது அவசியம்.

ஒருவேளை ஜேஸன் ராய், பேர்ஸ்டோவை களத்தில் நிற்கவைத்து அழகுபார்த்தால், முடிவு என்ன என்பதை ஏறக்குறைய அடுத்த ஒருமணிநேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் ஆடுகளத்தின் தன்மை அறிந்து சிறப்பாகப் பந்துவீசினார்கள். ஆடுகளத்தில் லேசாக புற்கள் இருந்ததால், நன்றாக பந்துகளை ஸ்விங் செய்ய முடியும், பவுன்ஸர் போட முடியும் என்பதை அறிந்து பந்துவீசினார்கள்.

இங்கிலாந்து அணியில் பந்துவீசிய 6 பந்துவீச்சாளர்களில் ஸ்டோக்ஸ் தவிர மற்ற 5 பேரும் சராசரியாக 4 ரன்களுக்கு அதிகமாக விட்டுக்கொடுக்காத அளவுக்கு சிக்கனமாக பந்துவீசினார்கள்.

அதிலும் குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர், வோக்ஸ், பிளெங்கெட், மார்க் உட் ஆகியோர் 148 வேகத்தில் பந்துவீசி நியூஸிலாந்து  பேட்ஸ்மேன்களை திணற வைத்தார்கள். பீல்டிங்கிலும் இங்கிலாந்து அணியினர் எந்தவிதமான தவறுகளுக்கும் இடம் தராமல் சிறப்பாகச் செயல்பட்டனர்.

பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகிறது என்று தெரிந்தவுடன் போக்ஸ், பிளங்கெட் பந்துவீசும்போது ஸ்லிப்பில் இரு பீல்டர்களையும், மார்க்வுட் பந்துவீசும்போது சில நேரங்களில் டெஸ்ட் போட்டியைப் போன்று 3 ஸ்லிப்புகளும் நிற்கவைத்து மிரட்டினார்கள். ஒட்டுமொத்தத்தில் இங்கிலாந்து அணி பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டது.

லண்டனில் நேற்று இரவு மழை பெயத்து, அதிகாலையும் மழை பெய்தது. இதனால் காலநிலை குளிர்ச்சியாகவும், காற்றில் ஈரப்படும் கலந்திருக்கும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனத் தெரிந்ததுதான்  கேன் வில்லியம்ஸன் டாஸ் வென்றவுடன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஏனென்றால், இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடுகையில் தங்களிடம் வலுவான பேட்டிங் இல்லை. ஒருவேளை இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யஅழைத்து, அவர்கள் 300 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால் அத்துடன் நியூஸிலாந்து அணியின் தோல்வி உறுதியாகிவிடும்.

ஆதால் இந்திய அணியிடம் செய்த வித்தையைப் போல் முதலில் பேட் செய்து 250 ரன்களுக்குள் அடித்து,  இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து வென்றுவிடலாம் என்ற நினைப்பில்தான் அவர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்திருக்கலாம்.

ஆனால், அவர் நினைத்ததைப் போலவே நிகோலஸைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் உருப்படியாக ரன்கள் சேர்க்கவில்லை. நிகோலஸ், லாதம் மட்டுமே ஓரளவுக்கு பேட்செய்தார்கள் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

வில்லியம்ஸன் நம்பிக்கை முழுவதும் பந்துவீச்சாளர்களை நம்பியே இருக்கிறது. பந்துவீச்சாளர்களை ஜேஸன் ராய், பேர்ஸ்டோவும் தொடக்கத்திலேயே வெளுத்து கட்டினால், நியூஸிலாந்தின் நிலைமை பரிதாபம்தான்.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கப்தில், நிகோலஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். வோக்ஸ், ஆர்ச்சர் தொடக்கத்தில் இருந்து நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை மிரட்டினர்

வோக்ஸ் வீசிய 3-வது ஓவரில் நிகோலஸ் கால்காப்பில் வாங்கியதால், நடுவர் எல்பிடபிள்யு கொடுத்தார். அதை எதிர்த்து அப்பீல் செய்து வெற்றி பெற்றார். ஆர்ச்சர் வீசிய 4-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்தார்  கப்தில்.

வோக்ஸ் வீசிய 7-வது ஓவரில் கப்தில் 19 ரன்கள் சேர்த்தநிலையில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 29 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது நியூஸிலாந்து.

 அடுத்துவந்த வில்லியம்ஸன் , நிகோலஸுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தார்கள். அவ்வப்போது சில பவுண்டரிகளைஅடித்தும், சிங்கள், இரு ரன்களாகவும்சேர்த்தனர்.

இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையி்ல் பிரிந்தனர். வில்லியம்ஸன் 30 ரன்கள் சேர்த்த நிலையில், பிளெங்கெட் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டெய்லர், நிகோலஸுடன் சேர்ந்தார். அடுத்து சிறிதுநேரமே நிகோலஸ் தாக்குப்பிடித்தார்.

நிதானமாக ஆடிய நிகோலஸ் 71 பந்துகளில் அரைசதம் அடித்து, 55 ரன்களில் பிளெங்கெட் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்த சிறிதுநேரத்தில் டெய்லர் 15 ரன்னில் மார்க்வுட் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார்.

அதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை. நீஷம்(19) கிராண்ட்ஹோம்(16) ஹன்றி(4) ரன்னில் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய லாதம்(47) ரன்னில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சான்ட்னர் 5 ரன்னிலும், போல்ட் ஒரு ரன்னிலும் களத்தில் இருந்தனர். 50 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது.

இங்கிலாந்து தரப்பில் பிளங்கெட், ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x