

நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் 12 ஆண்டுகளாக இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனா தக்கவைத்திருந்த சாதனையை இன்று முறியடித்துள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூஸிலாந்து அணி விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்த போட்டியில் வில்லியம்ஸன் 30 ரன்கள் சேர்த்திருந்தபோது, பிளங்கெட் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் வில்லியம்ஸன் 30 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கடந்த 12 ஆண்டுகளாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனா வைத்திருந்த சாதனையை முறியடித்துச் சென்றார்.
உலகக் கோப்பைப் போட்டியில் கேப்டனாக இருந்து அதிக ரன் சேர்த்தவர்களில் முதலிடத்தை இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனா பெற்றிருந்தார். ஜெயவர்த்தனா 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 548 ரன்கள் சேர்த்திருந்தார்.
அந்த சாதனையை வில்லியம்ஸன் இந்த முறை 550 ரன்கள் சேர்த்து 12 ஆண்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் வில்லியம்ஸன் 2 சதங்கள், 2 அரைசதங்கள் உள்ளிட்ட 550 ரன்கள் சேர்த்து 4-வது இடத்தில் உள்ளார்
உலகக்கோப்பைப் போட்டியில் கேப்டனாக இருந்து அதிக ரன்கள் சேர்த்தவர்கள் வரிசையில் தற்போது வில்லியம்ஸன் முலிடத்திலும், ஜெயவர்த்தனா 2-வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 539(2007) 3-ம் இடத்திலும், ஆரோன் பிஞ்ச்509(2019), 4-வது இடத்திலும், டிவில்லியர்ஸ் 482(2018) 5-வது இடத்திலும் உள்ளனர்.