Last Updated : 01 Jul, 2019 08:07 PM

 

Published : 01 Jul 2019 08:07 PM
Last Updated : 01 Jul 2019 08:07 PM

தோனியின் பேட்டிங், ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசுவது வியப்பாக உள்ளது: சஞ்சய் பங்கர் கேள்வி

மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் குறித்தும், அவரின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்தும் நாள்தோறும் கேள்வி எழுப்புவது வியப்பாக இருக்கிறது என்று இந்தியஅணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, இந்தியா இடையேயான உலகக்கோப்பை போட்டியின் முக்கியமான லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் சேர்த்தது. 338 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் சேர்த்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது.

தோனி 31 பந்துகளில் 42 ரன்களும், கேதார் ஜாதவ் 13 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

45-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தபின் இந்திய அணியின் வெற்றிக்கு 71 ரன்கள் கடைசி 5 ஓவர்களில் தேவைப்பட்டது. தோனியும், ஜாதவ்வும் களத்தில் இருந்தனர். கிரேட் ஃபினிஷர் என்று பெயரெடுத்துள்ள தோனி, நிச்சயம் வெற்றிக்கு அணியைக் கொண்டு செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தோனி பேட்டிங் செய்ய மிகவும் தடுமாறினார். கடைசி 31 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதில் 7 டாட் பந்துகளும், 20 ஒற்றை ரன்களும் எடுக்கப்பட்டன.

இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சர் பங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அவர் கூறியதாவது:

''தோனியின் பேட்டிங் ஃபார்ம், அவரின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்து நீங்கள் இதுபோல் அடிக்கடி கேள்வி எழுப்புவது வியப்பாக இருக்கிறது. அணிக்காக தோனி சிறப்பாக தனது  பணியைச் செய்து வருகிறார். அவர் ஆர்வத்துடன் முயற்சி எடுத்து பேட்டிங் செய்வது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியைத் தவிர மற்ற போட்டிகளில் தோனி தனக்குரிய பணியைச் சிறப்பாகச் செய்தார். 7 போட்டிகளில் 5 ஆட்டங்கள் தோனி தனது பங்கை சரியாகச் செய்துள்ளார். அணி இக்கட்டான சூழலில் இருந்தபோது இருமுறை தோனி நிதானமாக ஆடி ஸ்கோர் செய்யவில்லையா?

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் தோனி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் அவரின் பங்களிப்பு இருந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மான்செஸ்டர் ஆடுகளம் கடினமானது. அந்த ஆடுகளத்தில் 58 ரன்கள் சேர்த்தார் தோனி. ஒவ்வொரு பந்தையும் தோனி அணுகும் முறை சிறப்பாகத்தான் இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் கடைசி நேரத்தில் தோனியும், ஜாதவ்வும் பேட் செய்த விதத்தில் எனக்கு எந்தவிதமான குறைபாடும் இருந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு நினைக்கவும் இல்லை. பந்துவீச்சாளர்கள் எவ்வாறு பந்துவீசினார்களோ அதை எவ்வாறு சமாளித்து பேட் செய்ய முடியுமோ அவ்வாறு பேட் செய்தார்கள். வித்தியாசமான கோணங்களில் ஷாட்களை அடித்தார்கள்.

மெதுவான பவுன்ஸர்களில் நீண்ட தொலைவு பவுண்டரிகள் அடிப்பது கடினம்தான். கடைசி ஒன்று இரண்டு ஓவர்கள்தான். தேவைப்படும் ரன்னுக்கும், இருப்பு பந்துகளுக்கும்இடையிலான வேறுபாடு அதிகரித்தது.

ஷிகர் தவண் போன்ற இடது கை ஆட்டக்காரர் இல்லாதது வருத்தம்தான். ஆனால் நடுவரிசையில் இடது கை, வலது கை பேட்ஸ்மேன்கள் தேவை. அதற்காக ரிஷப் பந்த் வந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கூட ரிஷப் பந்த், பாண்டியா வலது,இடது கை பேட்டிங் கூட்டணிக்கு பந்துவீச முடியாமல் சிரமப்பட்டார்கள்.

நாளை போட்டியில் கேதார் ஜாதவ் இல்லாத சழலில் ரவிந்திர ஜடேஜா இடம்பெறுவார். அதேசமயம், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெறமாட்டார்கள் இன்று இப்போது கூற முடியாது. அது சூழலைப் பொறுத்து முடிவாகும்''.

இவ்வாறு பங்கர் தெரிவித்தார்.

இந்தியாவின் தோல்விக்கு தோனி மட்டும்தான் காரணமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x