Published : 02 Jul 2019 10:49 AM
Last Updated : 02 Jul 2019 10:49 AM

மிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி பும்ரா: கோலி, ரோஹித், பாண்டியா மைல்கல் எட்டுவார்களா?

எட்ஜ்பாஸ்டனில் இன்று நடைபெறும் உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்று முக்கிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் மைல்கல் எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தவிர வங்கதேச வீரர்கள், மகமதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால் ஆகியோரும் முக்கிய சாதனை படைக்க உள்ளனர்.

எட்ஜ்பாஸ்டனில் இன்று நடக்கும் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வங்கதேசம் களமிறங்குகிறது. இந்திய அணி அரையிறுதிச் சுற்றை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டாலும், பாதுகாப்பான இடத்தை அடைவதற்கு இன்னும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது.

அதேசமயம், வங்கதேசம் அணி இந்தப் போட்டியிலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் வென்றால், இங்கிலாந்து அணி நியூஸிலாந்து அணியிடம் தோற்றால், வங்கதேசம் அரையிறுதிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக மாறி இருக்கிறது.

இந்திய அணியில் பும்ராவின் பந்துவீச்சு முக்கியத் திருப்புமுனையாக இந்த ஆட்டத்தில் இருக்கும். சகிப் அல் ஹசன், தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோருக்கு எதிராக பும்ராவின் பந்துவீச்சு பேசப்படலாம்.

பும்ரா இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிக விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பட்டியலில் முகமது ஷமி, டிரன்ட் போல்ட் ஆகியோர் வரிசையில் இணைவார். முகமது ஷமி, போல்ட் ஆகியோர்  56 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2019-ம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு விராட் கோலிக்கு இன்னும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி ஆயிரம் ரன்க்ளை எட்டுவதற்கு இன்னும் 31 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

ரோஹித் சர்மா 2019-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை எட்ட இன்னும் 4 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டுவதற்க இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை. ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு ஹர்திக் பாண்டியாவுக்கு இன்னும் 82 ரன்கள் தேவைப்படுகிறது.

வங்கதேச வீரர் மகமதுல்லா 53 ரன்கள் சேர்த்தால் ஒருநாள் அரங்கில் அவர் 4 ஆயிரம் ரன்கள் எட்டுவார். 4 ஆயிரம் ரன்களை எட்டிய 4-வது வங்கதேச வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதற்கு முன் தமிம் இக்பால், சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் எட்டியுள்ளனர்.

வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் 115 ரன்கள் சேர்த்தால் உலகக் கோப்பை போட்டியில் 6 ஆயிரம் ரன்கள் சேர்த்த 3-வது வங்கதேச வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதற்கு முன் தமிம் இக்பால், சகிப் அல்ஹசன் 6 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர்.

வங்கேதச வீரர் தமிம் இக்பால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினால், அவருக்கு அது 200-வது சர்வதேச ஒருநாள் போட்டியாக அமையும். 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற 4-வது வீரர் எனும் பெருமையை இக்பால் பெறுவார். இதற்கு முன், மோர்தசா, முஷ்பிகுர் ரஹிம், சகிப் அல் ஹசன் ஆகியோர் 200 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x