Last Updated : 06 Jul, 2019 06:11 PM

 

Published : 06 Jul 2019 06:11 PM
Last Updated : 06 Jul 2019 06:11 PM

இந்தியா- இலங்கை போட்டியில் ‘காஷ்மீருக்கு நீதி’ பேனர் பறந்ததால் ஐசிசி கடும் அதிருப்தி

லீட்ஸில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ‘காஷ்மீருக்கு நீதி’ என்ற வாசகத்துடன் பேனர் பறந்ததில் ஐசிசி கடும் அதிருப்தி அடைந்துள்ளாது.

 

ஒரு விமானத்தில் ‘காஷ்மீருக்கு நீதி (ஜஸ்டிஸ் ஃபார் காஷ்மீர்)’ என்றும் இதனையடுத்த இன்னொரு விமானத்தில் ‘இந்தியா படுகொலையை நிறுத்து, காஷ்மீருக்கு விடுதலை கொடு’ (இந்தியா ஸ்டாப் ஜெனோசைட் அண்ட் ஃப்ரீ காஷ்மீர்) என்ற பேனர் பறந்தது.

 

இதனைக் கண்டித்து ஐசிசி தனது செய்திக்குறிப்பில், “இது மீண்டும் நிகழ்ந்துள்ளதால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். ஐசிசி ஆடவர் உலகக்கோப்பையில் நாங்கள் எந்த வித அரசியல் கோஷங்களையும் அனுமதிப்பதில்லை.  இந்த தொடர் முழுதும் உள்நாட்டு போலீஸ் உதவியுடன் இத்தகைய அரசியல் எதிர்ப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதற்கு முந்தைய சம்பவத்தில் வெஸ்ட் யார்க்‌ஷயர் போலிஸ் இனி இப்படி நடக்காது என்று உத்தரவாதம் அளித்திருந்தனர். ஆனால் மீண்டும் இவ்வாறு நடந்திருப்பது எங்களுக்கு கடும் அதிருப்தியை அளிக்கிறது” என்று வேதனை தெரிவித்துள்ளது.

 

கடந்த ஜூன் 29-ம் தேதி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ‘பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்’ என்று ஒரு பேனர் விமானம் மூலம் பறக்க விடப்பட்டது. இது நடந்ததும் இதே ஸ்டேடியத்தில்தான்.

 

அப்போதும் இது போன்ற அரசியல் எதிர்ப்புக் கோஷங்களுக்கு உலகக்கோப்பையில் இடமில்லை என்று ஐசிசி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் பலுசிஸ்தானுக்கு நீதி என்ற பேனருக்கு பதில் கொடுக்கும் விதமாக இந்த பேனர் அமைந்தது மிகவும் சர்ச்சைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x