Last Updated : 11 Jul, 2019 05:24 PM

 

Published : 11 Jul 2019 05:24 PM
Last Updated : 11 Jul 2019 05:24 PM

ரோஹித்தையும், கோலியையும் மட்டும் நம்பி இருந்தால் போதுமா, மற்ற வீரர்கள் என்ன செய்கிறார்கள்?- சச்சின் காட்டம்

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் எப்போதுமே சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்ககூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், லிட்டில் மாஸ்டருமான சச்சின் டெண்டுல்கர் விமர்சித்துள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்களில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதில் லீக் ஆட்டங்களில் 5 சதம் அடித்த ரோஹித் சர்மா, 6 அரைசதங்கள் அடித்த விராட் கோலி, ராகுல் ஆகியோர் ஒற்றை ரன்னில் ஆட்டமிழந்தனர். தோனியும், ரவிந்திரஜடேஜாவும் சேர்ந்துதான் சிறப்பான இன்னிங்ஸை அளித்தார்கள். ஆனாலும் கடைசியில் தோனியும்(50), ஜடேஜாவும்(77) ஆட்டமிழந்தபின் இந்திய அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் " இன்டியாடுடே"இணைதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

எந்தவிதமான சந்தேகமும் இன்றி, எளிதாக 240 ரன்களை சேஸிங் செய்திருக்க வேண்டும். ஆனால், சேஸிங் செய்யமுடியாமல் இந்திய அணி தோற்றது எனக்கு வேதனை அளிக்கிறது. இது ஒன்றும் பெரிய இலக்கு இல்லையே. ஆனால், நியூஸிலாந்து பந்துவீச்சை தொடங்கும் போதே நம்மிடம் இருந்து மிகப்பெரிய 3 விக்கெட்டுகளை பறித்துக்கொண்டு விளையாடத் தொடங்கினார்கள்.

என்னைப் பொருத்தவரை இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்கள் எப்போதும் கோலியும், ரோஹித் சர்மாவும் அணிக்காக ஸ்கோர் செய்து கொடுப்பார்கள் என்று நினைக்கக் கூடாது. அவர்களை நம்பி இருக்கக்கூடாது. மற்ற வீரர்களும் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் பெஸ்ட் பினிஷர் என்று சொல்லப்படும் தோனி எப்போதுமே போட்டியை முடித்துக்கொடுப்பார், கடைசிவரை நின்று விளையாடி அணியை வெற்றி பெறவைப்பார் என்று நினைப்பது நியாயமல்ல. தோனி ஏராளமான போட்டிகளில் அணியை வெற்றி  பெறவைத்துள்ளார், அருமையாக பினிஷிங் செய்து கொடுத்துள்ளார். இனிமேலும் செய்வார். ஆனால், அவரிடம் மட்டுமேஅதை எதிர்பார்க்க கூடாது

நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனின் கேப்டன்ஷிப் அற்புதமாக இருந்தது. எந்த பந்துவீச்சாளர்களை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினார். பந்துவீச்சாளர்களும் அதிகமான மோசமான பந்துகளை வீசவில்லை. சரியான இடத்தில் லைன் அன்ட் லென்த்தில் பந்து வீசினார்கள். விக்கெட்டை வீழ்த்தினார்கள்

இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x