Last Updated : 11 Jul, 2019 02:44 PM

 

Published : 11 Jul 2019 02:44 PM
Last Updated : 11 Jul 2019 02:44 PM

தோனியை 7ம் நிலையில் இறக்கியது மிகப்பெரிய தவறு: கங்குலி, லஷ்மண், சச்சின் சாடல்

உலகக்கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று வெளியேறிய இந்திய அணி நேற்று உத்தி ரீதியாக கடும் தவறுகளை இழைத்ததாக கங்குலி, லஷ்மண் உள்ளிட்ட முன்னாள் கிரேட்கள் விமர்சித்துள்ளனர்.

 

இந்திய அணி தொடக்கத்தில் சொதப்பி 5/3 என்றும் பிறகு 24/4 என்றும் பிறகு 92/6 என்றும் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் தோனிக்கு முன்பாக ரிஷப் பந்த், கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோரை களமிறக்கியது மிகப்பெரிய தவாறு என்று கங்குலி, லஷ்மண் சாடியுள்ளனர்.

 

ரிஷப் பந்த் 32 ரன்களுக்கு நன்றாகவே ஆடிவந்தார், ஆனால் எதிர்முனையில் தோனி போன்ற ஒரு பதற்றத் தணிப்பு வீரர் இல்லாததால் மிட்செல் சாண்ட்னரை தேவையில்லாமல் காற்றை எதிர்த்து ரிஷப் பந்த் ஸ்லாக் ஸ்வீப் ஆடி கேட்ச் ஆனார். தோனி இருந்திருந்தால் அவரை அந்த ஷாட்டை ஆட விட்டிருக்க மாட்டார் என்று மூத்த முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர்.

 

ரிஷப் பந்த்  ஆட்டமிழந்தவுடன் விராட் கோலி தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் சீரியஸாக பேசியது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

 

இந்நிலையில் விவிஎஸ் லஷ்மண் கூறும்போது,  “பாண்டியாவுக்கு முன்னதாக தோனி இறங்கியிருக்க வேண்டும், இது உத்தி ரீதியான மிகப்பெரிய தவறு. இன்னும் சொல்லப்போனால் தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக தோனி இறங்கியிருக்க வேண்டும். ஏனெனில் அந்தத் தருணம் தோனிக்காகவே காத்திருந்தது. 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நல்ல பார்மில் இருந்த யுவராஜ் சிங் இறங்காமல் தோனி தானே இறங்கினார். உலகக்கோப்பையை வென்றார்” என்றார்.

 

சவுரவ் கங்குலி கூறும்போது, “தோனி இன்னும் முன்னால் இறங்கியிருக்க வேண்டும். அவர் பேட்டிங்குக்காக இதைக் கூறவில்லை, அவரது பதற்றம் தணிப்பு தாக்கம் எதிர்முனை வீரரைக் கட்டுப்படுத்தியிருக்கும். அவர் இருந்திருந்தால் கொத்தாக விக்கெட்டுகள் விழ அனுமதித்திருக்க மாட்டார். ஜடேஜாவுடன் தோனி பேட்டிங் செய்த போது எல்லாம் நல்லபடியாக சென்றது. தோனியை 7ம் நிலையில் களமிறக்க முடியாது.

 

ஒரு பினிஷராக அவர் மீது இன்னும் அபரிமிதமான மரியாதை உள்ளது. அவரால் பந்துகளை இன்னமும் கூட வெளியே அடிக்க முடியும். அதனால்தன கடைசி வரை அவர் ஆட்டத்தைக் கொண்டு செல்கிறார், அவரால் சிக்சர்கள் அடிக்க முடியாமல் இல்லை ஆனால் அப்படித்தான் ஒருநாள் போட்டிகளை வெல்ல வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை” என்றார்.

 

சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “நெருக்கடியான தருணங்களில் தோனி போன்ற ஒரு அனுபவ வீரரை எப்படி பின்னால் அனுப்ப முடியும் என்பதே? முடிவில் ஜடேஜாவுட்ன அவர் தொடந்து பேசியபடி ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

 

ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் தோனி களமிறங்கியிருக்க வேண்டும். தினேஷ் கார்த்திக்கை 5ம் நிலையில் இறக்கியது பொருத்தமற்றது” என்றார்.

 

கங்குலி மீண்டும் கூறும்போது, “மிடில் ஆர்டரை வைத்து தேர்வுக்குழுவினர் விளையாடினர், இது தவறு” என்றார். ‘ரோஹித், விராட் இருவரையும் எப்போதும் நம்பிக்கொண்டிருக்க கூடாது’ என்றார் லஷ்மண்.

 

கங்குலி உரையாடலில் மீண்டும் கூறிய போது, “இந்தியா என்ன செய்ய வேண்டுமெனில் ரிஷப் பந்த்தை 5ம் நிலையில் இறக்க வேண்டும். கோலி 4ம் நிலையில் இறங்க வேண்டும். ஷிகர் தவன் வந்து விட்டார் என்றால் ராகுல் 3ம் நிலையில் இறங்கலாம். மிடில் ஆர்டரை சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு நிலையான வாய்ப்பளிக்க வேண்டும்.

 

மிடில் ஆர்டருடன் தேர்வுக்குழு விளையாடியதுதான் அணித்தேர்வாளர்கள் மீதான ஒரே விமர்சனம். எப்போதும் ஜடேஜா, பின்வரிசை வீரர்களை நம்பியா இருக்க முடியும்? என்கிறார் கங்குலி.

 

ஆனால் இந்த நேர்கோட்டு விமர்சனங்களைத் தாண்டிய ஒரு சூட்சமம் உள்ளது. தோனியை ஏன் முன்னால் இறக்கவில்லை என்பதில்தான் அந்த சூட்சமம் அடங்கியுள்ளது. அந்தக் கேள்வியை எந்த முன்னாள் தலைகளும் கேட்காது. அதுதான் வர்த்தக வலைப்பின்னல், பந்துகள் ஸ்விங் ஆகிக் கொண்டிருக்கும் போது தோனியை முன்னால் இறக்கி அவர் சொதப்பியிருந்தால் முன்னதாக ஆட்டம் முடிந்திருக்கும். எனவே இப்படி என்றால் அப்படி என்றால் இப்படி என்ற வாதங்கள் எப்போதும் இருக்கவே செய்யும். நியூஸிலாந்து சிறப்பாக ஆடினார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சாஹலுக்கு பதிலாக ஷமி ஆடியிருக்க வேண்டும் என்று எந்த ஒரு தலையும் கூறவில்லையே ஏன்? என்பதுதான் நம் வினா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x