Last Updated : 01 Jul, 2019 04:39 PM

 

Published : 01 Jul 2019 04:39 PM
Last Updated : 01 Jul 2019 04:39 PM

இங்கிலாந்திடம் தோல்வி: இந்திய அணியின் கிரிக்கெட் நேர்மையை கேள்வி எழுப்பிய வக்கார் யூனிஸ்

எட்ஜ்பாஸ்டனில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து இடையே நேற்று நடந்த லீக் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகும். இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்தால், அரையிறுதிக்கு தகுதி பெறாமல் இருந்திருக்கும்

அதேசமயம், அரையிறுதிக்கான வாய்ப்பை எதிர்நோக்கி பாகிஸ்தான் அணியும் காத்திருந்தது. இங்கிலாந்து ஒருவேளை நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்தால், பாகிஸ்தான் அணி அடுத்துவரும் ஒரு ஆட்டத்தில் வென்றால், அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் தோல்வி அடையாமல் வெற்றி நடைபோட்டு வந்த இந்திய அணி, நேற்று இங்கிலாந்திடம் 31 ரன்னில் தோற்றது பெரும் ஏமாற்றத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. கடைசி 5 ஓவர்களில் தோனியும், ஜாதவும் பேட் செய்த விதம் சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ், இந்தியாவில் தோல்வி குறித்தும், விளையாட்டின் நேர்மை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறுகையில், "இப்போது நீங்கள் செய்த செயல் நீங்களாகச் செய்யவில்லை. வாழ்க்கையில் என்ன நீங்கள் செய்கிறீர்களோ அது உங்களை தீர்மானிக்கும். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்வதோ அல்லது இல்லையோ அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு விஷயம் உறுதியானது. சில சாம்பியன்களின் உண்மையான கிரிக்கெட் நேர்மை, பெருந்தன்மை சோதிக்கப்பட்டது. அதில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் " எனத் தெரிவித்துள்ளார்.

வக்கார் யூனுஸ் இந்தியா குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்தமைக்கு சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் அவரை கடுமையாகச் சாடி வருகின்றனர்.

முன்னதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பாசித் அலி, சிக்கந்தர் பாகத் ஆகியோர், வேண்டுமென்றே இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து பாகிஸ்தானை அரையிறுதிக்குள் வரவிடாமல் தடுக்கும் என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தோல்விக்கு தோனி மட்டும்தான் காரணமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x