Last Updated : 01 Jul, 2019 01:04 PM

 

Published : 01 Jul 2019 01:04 PM
Last Updated : 01 Jul 2019 01:04 PM

இதுக்கெல்லாம் என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள்: தோனியின் மந்தமான ஆட்டம் குறித்து கங்குலி காட்டம்

தோனி மந்தமாக பேட்செய்து ஒரு ரன், இரண்டு ரன் அடித்ததற்கெல்லாம் என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, இந்தியா இடையேயான உலகக் கோப்பைப் போட்டியின் முக்கியமான லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் சேர்த்தது. 338 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் சேர்த்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது.

தோனி 31 பந்துகளில் 42 ரன்களும், கேதார் ஜாதவ் 13 பந்துகளில் 12 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

45-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தபின் இந்திய அணியின் வெற்றிக்கு 71 ரன்கள் கடைசி 5 ஓவர்களில் தேவைப்பட்டது. தோனியும், ஜாதவும் களத்தில் இருந்தனர். கிரேட் பினிஷர் என்று பெயரெடுத்துள்ள தோனி, நிச்சயம் வெற்றிக்கு அணியைக் கொண்டு செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 37 வயதான தோன பேட்டிங் செய்ய மிகவும் தடுமாறினார். கடைசி 31 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதில் 7 டாட் பந்துகளும், 20 ஒற்றை ரன்களும் எடுக்கப்பட்டன.

ஆப்கானிஸ்தான் போட்டியில் இருந்து தொடரும் தோனி, ஜாதவின் மந்தமான ஆட்டம் நேற்றும் தொடர்ந்தது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வெற்றி பெற வேண்டிய இலக்கு, கையில் 5 விக்கெட்டுகள் இருக்கிறது, துணிந்து அடித்திருக்கலாம் ஏன் தோனி அடித்து ஆடவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தோனியின் மந்தமான பேட்டிங் குறித்து மூத்த வீரர்கள் சவுரவ் கங்குலி, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைனும் விமர்சித்துள்ளனர்

தோனி கடைசிநேரத்தில் ஒற்றை ரன்கள் எடுத்தது குறித்து கங்குலியிடம் கேட்டபோது அவர் கூறுகையில், " தோனி எடுத்த ஒற்றை ரன்னுக்கெல்லாம் நான் விளக்கம் கொடுக்க முடியாது. இதுகுறித்து என்னிடம் கேள்வி கேட்கலாம், ஆனால், அவர் எடுத்த ஒரு ரன்னுக்கு எல்லாம் நான் பதில் அளித்துக்கொண்டிருக்க முடியாது. லென்த்தில் வீசப்பட்ட துல்லியமான பந்துவீச்சு, பவுன்ஸர் இந்திய பேட்ஸ்மேன்களை ஏமாற்றிவிட்டது. கையில் 5 விக்கெட்டுகளை வைத்திருந்தும், 338 ரன்களை சேஸிங் செய்ய முடியவில்லையே.

நீங்கள் போட்டியை எந்த வகையில், எப்படி அணுகுகிறீர்கள் என்பது உங்களின் மனநிலையைப் பொருத்து அமையும். இந்த போட்டியில் ஒரு செய்தி தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பந்து எங்கிருந்து வருகிறது, எங்கு பிட்ச் ஆகிறது என்பது விஷயமல்ல, நாம் பவுண்டரிக்கு அனுப்பி இருக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறுகையில், " இந்தியாவின் தோனி, ஜாதவ் ஆட்டத்தைப் பார்த்து முழுமையாக சோர்வடைந்துவிட்டேன். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இதுபோன்ற ஆட்டம் இந்திய அணிக்கு தேவையில்லை. இந்திய அணிக்கு ரன்கள் தேவை. தோனியும், ஜாதவும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்.

இருவரின் மந்தமான ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் சிலர் மைதானத்தைவிட்டு புறப்பட்டுச் சென்றார்கள். தோனி அடித்த ஷாட்கள் குறித்து நாம் கண்டிப்பாக ஆய்வு செய்ய வேணடும். இது உலகக் கோப்பைப் போட்டி, இரு மிகப்பெரிய அணிகள் மோதும  போட்டி என்பதை தெரிந்து கொண்டு ஆட வேண்டும். இந்திய அணி இன்னும் சிறப்பாக ஆடி இருக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். போராடி தோல்வி அடைந்திருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள் " எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ட்விட்டரில் கூறுகையில், " தோனி பேட்டிங் செய்தவிதம் என்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு குழப்பமாக இருந்தது. இந்தியாவின் வெற்றிபெறும் வேகத்தை, ரன்னை  எந்த அணியாவது தடுத்து நிறுத்தும் தகுதி இருந்திருந்தது என்றால் அது இங்கிலாந்துதான். தோனி கடைசிநேரத்தில் பேட்டிங் செய்தவிதம் எனக்கு குழப்பமாக இருந்தது " எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x