Last Updated : 01 Jul, 2019 02:04 PM

 

Published : 01 Jul 2019 02:04 PM
Last Updated : 01 Jul 2019 02:04 PM

பும்ரா வீசிய யார்கரால் மீண்டும் காயம்:உலகக் கோப்பையில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் விலகல்: புதிய வீரர் யார்?

இந்திய அணி வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான விஜய் சங்கர் காயம் காரணமாக, உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

பும்ரா வீசிய யார்கர் பந்துவீச்சில் ஏற்கனவே காயமடைந்த நிலையில் மீண்டும் காயமடைந்ததால், அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அறிமுகமாக சிறப்பாக விளையாடிய அகர்வால், ஒருநாள் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்படவில்லை.

ஆப்கானிஸ்தானுடனான போட்டிக்கு முன்பாக, இந்திய அணியினர் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பும்ரா பந்துவீச, அதை விஜய்சங்கர் எதிர்கொண்டார். பும்ரா வீசிய யார்க்கர் பந்து விஜய் சங்கரின் கணுக்கால் பகுதியில் பட்டது. உடனடியாக பேட்டிங் செய்வதை நிறுத்திய விஜய் சங்கர் வலியால் துடித்தார்.

உடனடியாக அங்கிருந்த வீரர்கள் விஜய் சங்கரை வேறு இடத்தில் அமரவைத்தனர். அணியின் மருத்துவர்கள் குழு விஜய் சங்கரை ஆய்வு செய்து முதலுதவி அளித்தனர். வலி அதிகமாக இருந்ததால், விஜய் சங்கர் அதன்பின் பேட் செய்யவில்லை. ஆனாலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார்.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நேற்று விஜய் சங்கர் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு கணுக்கால்பகுதியில் ஏற்பட்ட காயம்முழுமையாக குணமடையவில்லை எனக்கூறப்பட்டது.

இதற்கிடையே மீண்டும் வலைப்பயிற்சியின்போது பும்ரா வீசிய யார்கரில் விஜய் சங்கர் காயமடைந்ததால், அவர் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிசிசிஐ மூத்த நிர்வாகி ஒருவர்கூறுகையில், " வலைப்பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்கர் பந்துவீச்சில் விஜய் சங்கர் மீண்டும் காயமடைந்தார். விஜய் சங்கரின் உடல்நிலை தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு தகுதியானதாக இல்லை. ஆதலால், அவர் இந்தியாவுக்கு திரும்பிச் செல்கிறார்.

விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வாலை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ரிஷப் பந்த் அடுத்த இரு போட்டிகளில் சிறப்பாக விளையாடாத பட்சத்தில் ராகுல் மீண்டும் 4வது இடத்துக்கு களமிறக்கப்பட்டு, தொடக்க வீரராக மயங்க் அகர்வால் களமிறக்கப்படுவார் எனத் தெரிவித்தார்.

மயங்க் அக்ரவால் சேர்ப்புக்கு ஐசிசி தொழில்நுட்ப குழு ஒப்புதல் அளித்ததும் முறைப்படி அவரின் பெயர் அணியில் சேர்க்கப்படும்.

ஏற்கனவே இடதுகை பெருவிரல் காயத்தால், ஷிகர் தவன் விலகினார். தசைபிடிப்பு காரணமாக, புவனேஷ்வர் குமார் கடந்த இரு போட்டிகளாக விளையாடவில்லை.

இந்தியாவின் தோல்விக்கு தோனி மட்டும்தான் காரணமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x