Last Updated : 13 Jul, 2019 12:32 PM

 

Published : 13 Jul 2019 12:32 PM
Last Updated : 13 Jul 2019 12:32 PM

தோனி இல்லாமல் ஒரு போட்டியைக் கூட வெல்ல முடியாது, வாய்ப்பே இல்லை: ஸ்டீவ் வாஹ் புகழாரம்

தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், தோனி இல்லாமல் ஒரு போட்டியைக் கூட வெல்வதற்கான வாய்ப்பு இல்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் தோனியின் பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுடனான ஆட்டத்தில் தோனி மந்தமாக பேட் செய்கிறார் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழந்தபின், தோனியும், ரவிந்திர ஜடேஜாவும்தான் அணியை கட்டமைத்து வெற்றிவரை கொண்டு வந்தனர்.

ஆனால் துரதிர்ஷ்டமாக தோனி ரன்அவுட் ஆகவே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த ஆட்டத்திலும் தோனியை 7-வது வீரராக களமிறக்கியது குறித்தும் சர்ச்சை எழுந்தது. தோனி, 4-வது வீரராக களமிறங்கி இருந்தால், விக்கெட் விழாமல் கவனித்திருப்பார் என்று கருத்துக்கள் எழுந்தன. மேலும், உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபின் தோனி ஓய்வு அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வந்தன. அதை மறுத்துள்ள தோனி, அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

தோனி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

தோனி ஏராளமான போட்டிகளை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ள நிலையில் அவரைப் பற்றி குறைகூறுவது நியாயமற்றது. இப்போது விளையாடும் இதே பாணியில்தான் தோனி நீண்டகாலமாக விளையாடி வருகிறார்.

நியூஸிலாந்து எதிரான போட்டி போன்ற சூழலில் நீங்கள் இருக்கும்போது, தோனி இல்லாமல் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. உங்களால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முடியாது. நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-வது ரன் ஓடிவிட்டு வரும் போது தோனி கிரீஸ்க்கு சில இஞ்சுகள் மட்டுமே பின்தங்கி இருந்தார். ஒருவேளை தோனி ரன்அவுட் ஆகாமல் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருப்பார்.

 ஒருநாள் போட்டியின்போது சேஸிங்கில் நாம் வெல்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். இதுவரை விளையாடிய வீரர்களைக் காட்டிலும் தோனி சிறப்பாகவே விளையாடியுள்ளார்

240 ரன்களை இந்திய அணி சேஸிங் செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஹென்றி, போல்ட் பந்துவீச்சில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டார்கள்.

ஹென்றி, போல்ட் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. இதுபோன்ற உயர்ந்த அழுத்தம், நெருக்கடி கொண்ட போட்டிகளில் சேஸிங் செய்வது எளிதானது அல்ல, 240 ரன்களை எளிதாக சேஸிங் செய்துவிடுவோம் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால், தோற்றதால், இந்திய அணி வீரர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு ஸ்டீவ் வாஹ் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x