

வாழ்நாள் தடையை எதிர்கொண்டுள்ள குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி விவகாரத்தை சுமுகமாகத் தீர்க்க சச்சின் டெண்டுல்கர், விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பாநந்த சொனோவால் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “இந்த சந்திப்பு சரிதா தேவி விவகாரத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக நடைபெற்றது. ஒரு விளையாட்டு வீரனாக அவர் எத்தகைய மனோநிலையில் இருப்பார், அவரது வாழ்வில் இது எத்தகைய கட்டம் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது.
இது அவரது வாழ்க்கையில் மிகக்கடினமான தருணம். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக இதனை விவாதித்து வருகின்றனர். உலக குத்துச்சண்டை அமைப்பு அவருக்கு பரிவு காட்ட வேண்டும். அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார்.
இந்நிலையில் இவர் விவகாரத்தை உலக குத்துச் சண்டை அமைப்பிடம் எப்படி எடுத்துச் செல்வது என்பது பற்றியதாகும்.
நாடு முழுதும் சரிதா தேவிக்கு பக்கபலமாக இருக்கவேண்டும். எனவே அவரது குத்துச் சண்டை வாழ்வு பிரச்சினைக்குள்ளாகாமல் நாம் தடுப்பது அவசியம். விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆதரவு அளிக்கிறது. சரியான திசையில் சரிதா தேவி விவகாரத்தை முன்னெடுத்துச் செல்வது அவசியம்” என்றார்.
கடந்த வாரம் சரிதா தேவி விவகாரத்தை மத்திய அரசு கையிலெடுக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.