Published : 12 Jul 2019 03:40 PM
Last Updated : 12 Jul 2019 03:40 PM

என்னை ஆணவக்காரன், சுயநலமி என்றெல்லாம் அநியாயமாக விமர்சித்தனர்.. என் மனசாட்சி தெளிவாகவே உள்ளது: மனம் திறந்த ஏ.பி.டிவில்லியர்ஸ்

உலகக்கோப்பைப் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கடைசி நேரத்தில் தனக்கு வாய்ப்பிருக்கிறதா என்று 360 டிகிரி அதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் கேட்டதாக எழுந்த செய்தி பரபரப்பானது, ஆனால் தன்னை கடைசி நேரத்தில் சேர்க்க வேண்டும் என்று தான் வலியுறுத்தவில்லை என்று ஏ.பி.டிவில்லியர்ஸ் இப்போது தெரிவித்துள்ளார்.

 

மே 2018-ல் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவித்தார். ஓய்வு அறிவித்த அன்று கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நெருங்கிய நபர் ஒருவர்  ‘உலகக்கோப்பையில் விளையாட கதவுகள் திறந்தேயிருக்கின்றன’ என்று தன்னிடம் அந்தரங்கமாகக் கூறியதாகவும் அந்த அடிப்படையிலேயே தான் உலகக்கோப்பையில் ஆட முடியுமா என்று டுபிளெசிஸிடம் கேட்டதாகவும் ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

 

தன்னிடம் கேட்ட அந்த நபரின் பெயரைக் குறிப்பிட விரும்பாத டிவில்லியர்ஸ் அவர்தான் டுப்ளெசிசிடம் சாதாரணமாக இது குறித்து கேட்குமாறும் தன்னிடம் கூறியதாகவும் டிவில்லியர்ஸ் இப்போது தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் டிவில்லியர்ஸ் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

 

நான் ஓய்வு அறிவித்த தினத்தன்று என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்கப்பட்டது, உலகக்கோப்பைக்கு வரும் எண்ணமுள்ளதா என்று. நான் உடனேயே ஆமாம் என்றேன், ஆனால் இப்போது தோன்றுகிறது, நான் அப்போதே வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும் என்று. ஆனால் என்னுடைய இயல்பான மனநிலை எதையும் யார் கேட்டாலும் மறுக்காது, உடனடியாக ஏற்றுக் கொள்வது என்பதால் ஆம் என்று கூறிவிட்டேன்.

 

ஆனால் அதன் பிறகு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கும் அணிக்கும் எனக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை. அவர்களும் என்னை அழைக்கவில்லை, நானும் அவர்களை அழைக்கவில்லை.

 

நானும் டுபிளெசிஸும் பள்ளிப்படிப்பு காலத்திலிருந்தே நண்பர்கள். ஆனால் உலகக்கோப்பை அணி அறிவிப்பதற்கு 2 நாட்கள் முன்னதாக நான் அவரைத் தொடர்பு கொண்டேன். அப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓரளவுக்கு நல்ல பார்மில் இருக்கிறேன், ஆகவே தேவைப்பட்டால் நான் உலகக்கோப்பையில் ஆடுகிறேன், அதாவது தேவைப்பட்டால் என்றே கூறினேன்.

 

நான் வற்புறுத்தவும் இல்லை அணிக்குள் பலவந்தமாக நுழையவும் முயற்சிக்கவில்லை. எனவே என் பக்கத்திலிருந்து பற்றி எரியும் பிரச்சினை எதுவும் இல்லை, பெரிய அநீதியும் ஒன்றுமில்லை.

 

முதலில் மே 2018-ல் ஓய்வு அறிவித்தேன், என் மனைவி, குழந்தைகளுடன் நேரம் செலவிட நினைத்தேன், பணிச்சுமை காரணமாக களைப்பு ஏற்பட்டு ஓய்வு அறிவித்தேன், ஆனால் மக்கள் நான் பணத்தாசை பிடித்தவன் அதனால்தான் தேசத்துக்கு ஆடாமல் தனியார் கிரிக்கெட்டுக்குச் சென்று விட்டேன் என்று சாடினர், ஆனால் அதில் உண்மையில்லை.  காரணம் எனக்கு பல லீகுகளிலிருந்தும் பெரிய தொகை கொடுத்து ஆட அழைப்பிருந்தது, ஆனால் நான் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆண்டுக்கு 8 மாதங்கள் குடும்பத்தை விட்டு பிரிய நேர்ந்தது, ஓய்வுக்குப் பிறகு இது 3 மாதங்களாகக் குறைந்தது.

 

என்னுடைய மனசாட்சி தெளிவாகவே உள்ளது. நேர்மையான காரணங்களுக்காகவே ஓய்வு பெற்றேன். ஆனால் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தோற்ற போது எங்களுடைய சொந்த உரையாடல்கள் ஊடகங்களுக்குக் கசிந்து என்னை மோசமானவனாகச் சித்தரித்தது.  அந்தக் கதை என்னாலோ, டுபிளெசிஸாலோ கசியவில்லை, யாரோ அணியின் தோல்வி மீதான விமர்சனத்தை திருப்பி விட விரும்பி இப்படிச் செய்திருக்கலாம். இதுவும் எனக்குத் தெரியவில்லை.

 

இதனையடுத்தே என்னை நியாயமற்ற முறையில் செருக்குப் பிடித்தவன், சுயநலமி,  தீர்மானமற்றவன் என்றெல்லாம்  விமர்சித்தனர். என்னுடைய மனசாட்சி தெளிவாகவே உள்ளது, நேர்மையான காரணங்களுக்காகத்தான் நான் ஓய்வு பெற்றேன்.

 

மகிழ்ச்சியற்ற தேவையற்ற இந்த நிகழ்வுகளின் என் தரப்பினை நான் விளக்கும் அதே வேளையில் என்னை வளர்த்த, உருப்படுத்திய அணியையும் கிரிக்கெட்டையும் அது எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அபாரமான நட்புகளையும், வாய்ப்புகளையும் நான் என்றென்றும் மறவேன்.

 

இவ்வாறு கூறியுள்ளார் டிவில்லியர்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x