உலகக்கோப்பையில் இதுவரை மொத்தம் 25 சதங்கள்: அதிக சதங்களில் இங்கிலாந்து முதலிடம்
ஐசிசி உலகக்கோப்பை 2019-ல் 41 ஆட்டங்கள் முடிந்து விட்ட நிலையில் மொத்தம் 25 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் இங்கிலாந்து வீரர்கள் 7 சதங்கள் அடிக்க சதங்களில் இதுவரை இங்கிலாந்து முதலிடம் பிடித்துள்ளது.
ஆடுகளங்கள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தொடரில் சில மைதானங்களில் மழைக் காரணமாக ஆடுகளங்கள் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தன. இதனால் சதங்கள் சற்று குறைந்துள்ளன.
இங்கிலாந்து அணி வெற்றிகளில் தொடங்கி பிறகு திடீரென இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடும் உதை வாங்கி பின்னடைவு கண்டது, ஆனால் மீண்டும் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக ஜேசன் ராய் அணிக்குத் திரும்ப பேர்ஸ்டோ இரு போட்டிகளிலும் அடுத்தடுத்து சதங்களைக் குவிக்க இங்கிலாந்து அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இங்கிலாந்து அதிகபட்சமாக 7 சதங்கள் (பேர்ஸ்டோ-2, ஜோ ரூட் -2, ஜேசன் ராய், மோர்கன், பட்லர் தலா ஒன்று) விளாசியுள்ளது.
ஐந்து சதங்களுடன் (ரோஹித் சர்மா-4, தவான் -1) இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா நான்கு சதங்களும், வங்காள தேசம் மூன்று சதங்களும், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு சதங்களும், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு சதமும் அடித்துள்ளன.
