Last Updated : 13 Jul, 2019 05:14 PM

 

Published : 13 Jul 2019 05:14 PM
Last Updated : 13 Jul 2019 05:14 PM

உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்:  ‘லாப நோக்கம் வேண்டாம்’-இந்திய ரசிகர்களுக்கு ஜிம்மி நீஷம் வேண்டுகோள்

இந்திய அணிதான் உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறி கோப்பையை வெல்லும் என்ற கனவுகளுடன் இந்திய ரசிகர்கள் டிக்கெட்டுகளை பவுண்டுகளைக் கொட்டி வாங்கியிருந்தனர். ஆனால் அரையிறுதியில் இந்திய அணி நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேற இந்திய ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமே ஏற்பட்டது.

 

இதனையடுத்து ஜூலை 14ம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை புரோக்கர்கள் மூலமாகவும் சிலபல இடைத்தரகர்கள் மூலமாகவும் அதிக விலைகள் வைத்து இந்திய ரசிகர்கள் விற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

முறைப்படி டிக்கெட்டுகளை திருப்பி கொடுத்து உரிய தொகையை திரும்பப் பெறாமல் லாபநோக்கில் இந்திய ரசிகர்கள் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன, அதோடு யார் ஆடினால் என்ன? போட்டியை கிரிக்கெட்டுக்காக ரசிக்க வேண்டியதுதானே? என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன.

 

இதனையடுத்து நாளை இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டிக்கான டிக்கெட் இன்றி பலரும் தவித்து வரும் நிலையில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு இந்திய ரசிகர்களால் விற்கப்படுவது குறித்து நியூஸிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் தனது ட்விட்டரில் இந்திய ரசிகர்களுக்கு மனம் திறந்த வேண்டுகோளை விடுத்துள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது:

 

“டியர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களே! உங்களுக்கு இறுதிப் போட்டிக்கு வர விருப்பமில்லை என்றால் அதிகாரபூர்வ வழிமுறைகளில் டிக்கெட்டுகளை தயவுகூர்ந்து விற்பனை செய்யுங்கள்.  இதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவதற்கான சபலம் ஏற்படும் என்பது உண்மைதான் என்பதை நான் நன்கு அறிவேன். தயவு கூர்ந்து உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு போட்டியைக் காண வாய்ப்பளியுங்கள். பணக்காரர்கள் மட்டுமே பார்க்க வேண்டுமா” என்று மிகவும் வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார்.

 

பிளாக்கில் ஒரு டிக்கெட் விலை ரூ.13 லட்சத்திற்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது, இன்னும் ஒரு சிலர் இந்திய அணி வரவில்லை என்பதற்காக வெறுப்பில் டிக்கெட்டை கிழித்துப் போட்டு விடுவதாகவும் தகவல்கள் வெளியாகவே ஜிம்மி நீஷம் ‘உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள்’ காண வழிவகை செய்யுங்கள் என்று வேதனை கோரிக்கை வைத்துள்ளார்.

 

ஜேம்ஸ் நீஷத்தின் இந்த ட்வீட்டிற்கு பலரும் பலவிதமாக பதிலிட்டு வருகின்றனர், குறிப்பாக இந்திய ரசிகர்களின் ‘பேராசை’ என்ற நோக்கிலும், உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் இல்லை என்ற தொனியிலும் பதில்கள் அமைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x