Last Updated : 06 Jul, 2019 06:59 AM

 

Published : 06 Jul 2019 06:59 AM
Last Updated : 06 Jul 2019 06:59 AM

வெளியேறியது பாகிஸ்தான்; வங்கதேசத்தை வீழ்த்தியும் அரையிறுதி கனவு கலைந்தது: ஷோயப் மாலிக் ஓய்வு, சகிப் அல் ஹசன் சாதனை

இமாம் உல் ஹக்கின் சதம், ஷாகீன் ஷா அப்ரிடியின் 6 விக்கெட் ஆகியவற்றால் லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.

இந்த போட்டியில் வென்றபோதிலும்கூட பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு தகுதிபெற முடியவில்லை. வங்கதேச அணியை 7 ரன்களுக்குள் சுருட்டினால்தான் அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில், வங்கதேச அணி 8-வது ரன்னை அடித்தபோதே பாகிஸ்தானின் அரையிறுதி கனவு தகர்ந்துவிட்டது.

உகாண்டா, பாலி மகளிர் அணிகளுக்கு இடையே நடந்தபோட்டி போல் நடந்திருந்தால், ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதி சென்றிருக்கும். கடந்த மாதம் நடந்த ஆட்டத்தில் உகாண்டா மகளிர் அணி 314 ரன்கள் குவிக்க பாலி மகளிர் அணி 10 ரன்களில் சுருண்டது. அதுபோல் ஏதாவது அசாதாரண வெற்றி இருந்தால் பாகிஸ்தான் அரையிறுதி ெசன்றிருக்கும்.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. 316 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும்இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 44.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்து 94 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியி்ல் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சதம் அடித்தார், இளம் வீரர் ஷாகின் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்து ஆட்டநாயகன் வென்றார், மூத்த வீரரும் சானியா மிர்சாவின் கணவருமான ஷோயப் மாலிக் 20 ஆண்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவை அனைத்தும் நடந்தும் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு செல்லாத வெற்றி மகிழ்ச்சி அளிக்கவில்லை.

உலகக்கோப்பப் போட்டியில் ஒரு அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகள் பெற்றபின் அரையிறுதிக்குள் செல்லாமல் வெளியேறுவது இதுதான் முதல்முறை, அந்த அணியும் பாகிஸ்தான் மட்டுமே.

பல்வேறு சூழல்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவே அமைந்துவிட்டன. அதிலும் தொடக்கத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் அடைந்த படுதோல்வி பாகிஸ்தான் ரன்ரேட்டை அதளபாதாளத்தில் கொண்டு சென்றது.

ஆஸ்திரேலிய அணியிடம் வெல்ல வேண்டிய நிலையில் தோற்றது, மேற்கிந்தியத்தீவுகளிடம் நியூஸிலாந்து தோற்க வேண்டிய நிலையில், பிராத்வெய்ட் கேட்சை போல்ட் பிடித்தார். அந்த கேட்சை போல்ட் பிடிக்காமல் இருந்திருந்தால் நியூஸிலாந்து தோற்றிருக்கும், இப்போது சூழ்நிலை மாறி இருக்கும். இலங்கையுடன் ஒருபோட்டி மழையால் ரத்தானது, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து 2-வது பேட் செய்தது ஆகியவை பாகிஸ்தானுக்கு எதிராக அமைந்துவிட்டன. இவை அனைத்தையும் தாண்டி தொடக்கத்தில் அந்த அணியினர் மந்தமாக விளையாடியதன் விளைவுதான் பலதோல்விகளைச் சந்தித்தார்கள் என்பதை மறுக்க முடியாது.

வங்கதேச அணியைப் பொருத்தவரை அந்த அணியின் ஆல்ரவுண்டர் சகிப் அல் ஹசன் நேற்று 64 ரன்களில் ஆட்டமிழந்தார். உலகக்கோப்பைப் போட்டியில் 600 ரன்களுக்குமேல் அடித்து, 11 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் எனும் பெருமையை சகிப் அல் ஹசன் பெற்றார். உலகக் கோப்பைப் போட்டியில் 600 ரன்களுக்கு மேல் சேர்த்தவர்களில் சச்சின் டெண்டுல்கர், மேத்யூ ஹேடன் ஆகியோர் வரிசையில் சகிப் அல் ஹசன் இணைந்தார்.

மற்றவகையில் வங்கதேச அணியினர் சொல்லிக் கொள்ளும் விதமாக நேற்று விளையாடவில்லை. இந்த தொடரில் தென் ஆப்பிரி்க்கா, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அளித்த அதிர்ச்சிகரமான வெற்றி வங்கதேச அணியின் மதிப்பை உயர்த்தியது. ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்கள் வரை அடிக்க முயற்சித்தது, எதிரணியிடம் எளிதாக வீழ்ந்துவிடாமல் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி ,தங்களை அடுத்த கட்டத்துக்கு உயர்த்திக்கொண்டது வங்கதேசம்.

இதன் வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 3 தோல்விகள் ஒரு போட்டி ரத்து என 11  புள்ளகளுடன் ரன்ரேட் குறைவால் 5-ம் இடத்துடன் வெளிேயறியது. வங்கதேசம் அணி 9 போட்டிகளில் 3 வெற்றிகள் 5 தோல்விகள் ஒரு போட்டி ரத்து என 7 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்தது

டாஸ்வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. டாஸ் வெல்லாமல் இருந்தாலே பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு அப்போதே முடிவுக்கு வந்திருக்கும்.

பக்கர் ஜமான், இமாம் உல்ஹக் ஆட்டத்தத் தொடங்கினர். தொடக்கத்திலேயே சுழற்பந்துவீச்சாாளர் மெஹதி ஹசனை களமிறங்கி வங்கதேசம் நெருக்கடி அளித்தது. 13 ரன்னில் பக்கர் ஜமான் ஆட்டமிழந்தார்

2-வது விக்கெட்டுக்கு பாபர் ஆஸம், இமாம் உல் ஹக் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக அடிஅணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பாபர் ஆசம் 62 பந்துகளிலும், இமாம்உல் ஹக் 52 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். 2-வது விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

சதத்தை நோக்கி முன்னேறிய பாபப் ஆஸம் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து முகமது ஹபீஸ் களமிறங்கினார். சிறப்பாக ஆடிய இமாம் உல் ஹக் 99 பந்துகளில் தனது 6-வது ஒருநாள் சத்ததை பதிவு செய்து 100 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஹபி்ஸ், இமாம்உல் ஹக் ஜோடி 66 ரன்கள் சேர்த்தனர்.

42 ஓவர்களில் 246 ரன்களுக்கு 3-வது விக்கெட் என வலுவடன் பாகிஸ்தான் இருந்தது. ஆனால், அடுத்த 8 ஓவர்களில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சரிவைச் சந்தித்தது. ஹபீஸ்(27), ஹாரிஸ் சோஹைல்(6), இமாத் வாசிம்(43), வகாப் ரியாஸ்(2), சதாப்கான்(1), அமிர்(8), சர்பிராஸ்அகமது 3 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான். சிறிது பொறுப்புடன் பாகிஸ்தான் வீரர்கள் பேட் செய்திருந்தால், 350 ரன்களைத் தொட்டிருக்க முடியும். ஆனால் கோட்டை விட்டனர்.

வங்கதேசம் தரப்பில் முஷ்தபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளையும், சைபுதீன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

316 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. அரையிறுதிக்கு தகுதிபெற முடியாது என்பதால் என்னவோ தன்னம்பிக்கையற்ற பேட்டிங் வீரர்களிடம் தெரிந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால்(8), சவுமியா சர்க்கார்(22)ரன்னில் ஆட்டமிழந்தனர். அனுபவ வீரர் சகிப் அல் ஹசன் களத்தில் நின்று 64 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

மற்ற வீரர்களான முஷ்பிகுர் ரஹ்மான்(16), லிட்டன் தாஸ்(32), மகமதுல்ல(29), மொசாடக் ஹூசைன்(16) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

சகிப்அல்ஹசன் ஆட்டமிழந்தபோது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்திருந்தது வங்கதேசம். அதன்பின் அடுத்த 12 ஓவர்்களில் 67 ரன்கள் சேர்்த்து மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம்.

பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளையும், சதாப்கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x