

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா தசைப்பிடிப்பு காரணமாக, உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மற்றொரு வீரரும், ஆல்ரவுண்டருமான மார்க்ஸ் ஸ்டானிஸ்க்கு ஏற்பட்ட காயம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.மருத்துவ பரிசோதனைக்குப்பின் அவரின் நிலை தெரியவரும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக உஸ்மான் கவாஜா விலகியது அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது
ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், " உஸ்மான் கவாஜாவுக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பால், இன்னும் 3 வாரங்களுக்கு அவரால் விளையாட முடியாது. ஆதலால், உலகக்கோப்பைத் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். கவாஜாவுக்கு பதிலாக மேத்யூ வாட் அழைக்கப்பட்டுள்ளார். அவரைச் சேர்ப்பது குறித்து ஐசிசியிடம் வாரியம் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அடுத்து தொடங்கும் ஆஷஸ் தொடருக்கு முன்பாக கவாஜா தேறிவிடுவார் என்று நம்புகிறேன். அதேபோல ஷான் மார்ஷ் ஒருபோட்டியில் கூட விளையாடமல் அவர் காயத்தால் விலகியது எனக்கு வருத்தமளிக்கிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் ஸ்டானிஸ் காயமடைந்தார். அவரின் காயம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். மருத்துவர்கள் அறிக்கைக்கு பின் அவர் உடல்நிலை குறித்து முடிவு எடுக்கப்படும் " எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே ஸ்டானிஷ் காயமடைந்து இருபோட்டிகளில் ஓய்வு எடுத்திருந்து மீண்டும் விளையாட வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கவாஜா காயமடைந்து, ரிட்டயர்ஹட் முறையில் பாதியிலேயே சென்றார். அதன்பின் கடைசிநேரத்தில் களமிறங்கி ஆட முயற்சித்தும் முடியாமல் 18 ரன்னில் கவாஜா ஆட்டமிழந்தார்.