Published : 03 Jul 2019 03:48 PM
Last Updated : 03 Jul 2019 03:48 PM

பரபரப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை வெளியேற்றியது: கோப்பா இறுதியில் பிரேசில்

கால்பந்தாட்டத்தில் முக்கிய நாக் அவுட் ஆட்டங்களில் தோல்வி தழுவி வரும் வழக்கம் மெஸ்ஸி தலைமை அர்ஜெண்டினாவுக்கு நீடித்து வருகிறது, கால்பந்து சோக்கர்ஸ் என்று அழைக்கலாமோ என்று கருதும் விதத்தில் பிரேசில் அணிக்கு எதிரான கோப்பா அமெரிக்கா கால்பந்து அரையிறுதி ஆட்டத்தை 0-2 என்று பிரேசிலிடம் இழந்தது.

 

 

பிரேசிலின் கேப்ரியல் ஜீசஸ் 19வது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க 71வது நிமிடத்தில் ஃபர்மினோ 2வது கோலை அடிக்க, அர்ஜெண்டினாவின் கோல் முயற்சிகள் அனைத்தும் வீணாகின. அர்ஜெண்டினாவின் 26 ஆண்டுகால காத்திருப்பு தொடர்கிறது.  மெஸ்ஸி மிகவும் சோர்வடைந்து ஏமாற்றமடைந்து விட்டார்.

 

 

மெஸ்ஸியை பெரும்பாலும் முன்னேற விடாமல் கால்தட்டுப் போட்டுக் கொண்டேயிருந்தனர், பிற சமயங்களில் அவர் தெளிவாக மார்க் செய்யப்பட்டு மெஸ்ஸியின் பரபரப்பான கால்கள் முடக்கப்பட்டதை பிரேசில் உறுதி செய்துகொண்டது.

 

ஆட்டம் தொடங்கி முதல் நிமிடம் கடந்த உடனேயே பிரேசிலுக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது, மிக அருகிலிருந்து அடித்த ஷாட்டை பிடிப்பதற்கு மிகவும் கடினமானதை சுலபமாக பிடித்தது போல் பிரமாதமாகப் பிடித்தார் அர்ஜெண்டினா கோல் கீப்பர். இரு அணிகளும் பயங்கரப் போட்டியுடன் விளையாட முதல் 10 நிமிடங்களிலேயே இரு அணிகளும் 10 முறை ஃபவுல் செய்தன.

 

ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் டேனி ஆல்வேஸ் வலது புறத்தில் மிக அருமையாக அர்ஜெண்டினா வீரர்களை கடைந்து எடுத்து பந்தை விறுவிறுவென முன்னேறிச் செல்ல அங்கு ஃபெர்மினோவிடம் பந்தைக் கொடுக்க இவரும் மிக அழகாக தாழ்வாக ஒரு கிராஸைச் செய்ய அங்கு கேப்ரியல் ஜீஸஸ் கோலுக்கு அருகிலிருந்து முதல் கோலை அடித்தார். அர்ஜெண்டினா அணி 30வது நிமிடத்தில் சமன் செய்திருக்க வேண்டும், லியோனல் மெஸ்சியின் அபாரமான ஃப்ரீ கிக்கை அகுயெரோ கோல் மேல் கம்பியில் அடிக்க திரும்பி வந்த பந்தையும் தவற விட்டார்.

ஆனால் ஒரு கோலுக்குப் பிறகே பிரேசில் அணி தடுப்பணையை வலுப்படுத்தியது, எதிரணியில் மெஸ்ஸி இருக்கும் போது இது அபாயகரமான உத்தியாகும் ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் மெஸ்ஸி எந்த ஒரு தடுப்பணையையும் மீறி ஊடுருவும் திறமை கொண்டவர். அப்படித்தான் 15 அடியிலிருந்து 57 வது நிமிடத்தில் அடித்த புல்லட் ஷாட் போஸ்டில் பட்டு திரும்பி வந்தது.

 

ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் எதிர்த்தாக்குதலில் அர்ஜெண்டினா மும்முரம் காட்டியதால் சமயத்தில் இப்படி பல அணிகளுக்கும் ஏற்படுவதுண்டு, எதிர்த்தாக்குதலின் போது தடுப்பாட்டத்தை கவனிக்கத் தவறிவிடுவார்கள், அப்படித்தான் இந்த ஆட்டத்திலும் அர்ஜெண்டினா செண்டர் பேக் வீரர்களான ஜெர்மன் பெஸெல்லா, நிகோலஸ் ஒடாமெண்டி ஆகியோரை அனாயசமாகக் கடந்து பந்தை எடுத்துச் சென்றார் கேப்ரியல் ஜீசஸ் மிகப்பிரமாதமாக அதை பெர்மினோவிடம் கொடுக்க அவரது வேலை எளிதானது, தடுப்பணையில் கோட்டை விட்டது அர்ஜெண்டினா.

 

பயிற்சியாளர் டிடேவின் கீழ் 42 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே பிரேசில் தோல்வி கண்டுள்ளது,  இறுதிப் போட்டியில் பெரூ அல்லது கொலம்பியாவைச் சந்திக்கும் பிரேசில்.  2005 முதல் அர்ஜெண்டினா அணி பிரேசிலை முக்கியப் போட்டித் தொடர்களில் வென்றதில்லை.

 

முதல் பாதியில் அர்ஜெண்டினா வீரர் அகுயெரோ அருமையான வாய்ப்பை தலையால் முட்டி மேல் கம்பியில் அடித்து வீண் செய்தார், லியோனல் மெஸ்சி ஒரு அபார முயற்சியில் அடித்த ஷாட்டும் போஸ்ட்டைத் தாக்கியது.  அதிர்ஷ்டமும் இல்லை, ஆட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிரேசிலை ஆதிக்கம் செலுத்தினார்களா என்றால் அதுவும் இல்லை.

 

இந்தத் தொடர் முழுதும் வீடியோ ரெஃபரல் பயன்படுத்தப்பட்டாலும் இந்தப் போட்டியில் அது அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்பது விமர்சனத்துக்குரியது காரணம் ஆர்தர் அர்ஜெண்டினா வீரரை கீழே தள்ளினார்.

 

நடுவர் தீர்ப்புகள் பல தங்களுக்கு எதிராகச் சென்றதாக மெஸ்ஸி போட்டிக்குப் பிறகு உடைந்து போனார். 26 ஆண்டுகள் கழித்து கோப்பா அமெரிக்காவை வெல்லும் வாய்ப்பை மீண்டும் பிரேசிலினால் இழந்தது அர்ஜெண்டினா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x