Last Updated : 12 Jul, 2019 01:14 PM

 

Published : 12 Jul 2019 01:14 PM
Last Updated : 12 Jul 2019 01:14 PM

ஒழுங்கீன நடவடிக்கை: சஸ்பெண்டில் இருந்து தப்பித்த ஜேஸன் ராய்

பிர்மிங்ஹாமில் நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராய் களத்தில் ஒழுங்கீனமாக நடந்து, நடுவரிடம் வாக்குவாதம் செய்ததால், அவருக்கு போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

பிர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது 4-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது.

இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராய் அதிரடியாக ஆடி 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய வீரர் கம்மிஸ் வீசிய 19-வது ஓவரை ஜேஸன் ராய் எதிர்கொண்டார். அப்போது பந்து அவரின் பேட்டை உரசிச் சென்றதை, விக்கெட் கீப்பர் காரே தாவிப்பிடித்தார்.

உடனடியாக அனைத்து வீரர்களும் நடுவரிடம் அவுட் கேட்டு முறையிட, நடுவர் தர்மசேனா அவுட் வழங்கினார். மேலும், நடுவரின் முடிவையும் அப்பீல் செய்வதற்கு ரிவீயுமும் இங்கிலாந்து அணியிடம் இல்லை. இருந்தஒரு ரிவியூவையும் பேர்ஸ்டோ வீணடித்துவிட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த ஜேஸன் ராய், நடுவரிடம் வாக்குவாதம் செய்து அங்கிருந்து புறப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நடுவர் தர்மசேனா, போட்டி நடுவர்  ரஞ்சன் மடுகளேயிடம் புகார் அளித்தார்.

மேலும் நடுவர்கள் மரியாஸ் எராஸ்மஸ், 3-வது நடுவர் கிறிஸ் கஃபானி, 4-வது பார்வையாளர் அலீம் தார் ஆகியோர் இது குற்றம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, நடந்த விசாரணையில் ஜேஸன் ராயும் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போட்டி ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக செலுத்தவும், 2 டீமெரிட் புள்ளிகள் வழங்கியும் ஐசிசி நடுவர் உத்தரவிட்டார்

இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது " ஐசிசி ஒழுங்கு முறை விதிகளை மாறி ஜேஸன் ராய் செயல்பட்டது உறுதியானது. சர்வதேச போட்டியில் நடுவரின் முடிவுக்கு ஜேஸன் ராய் எதிர்ப்புத் தெரிவித்தது ஒழுங்கு விதிமுறைக்கு மாறானது. ஆதலால், ஜேஸன் ராய்க்கு அவரின் போட்டி ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாகச் செலுத்த உத்தரவிடுகிறோம். மேலும் அவருக்கு 2 டீமெரிட் புள்ளிகளும் வழங்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

ஒரு வீரர் 2 ஆண்டுகளுக்குள் 2 டீமெரிட் புள்ளிகளுக்கு மேல் பெற்றால், அந்த வீரரை 2 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்க முடியும். இன்னும் ஜேஸன் ராய் ஒரு புள்ளி பெற்றால் தடைவிதிக்கப்படுவார். ஆனால், அதிலிருந்து ராய் தப்பித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x