

மான்செஸ்டரில் நடந்துவரும் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது நியூஸிலாந்து அணி.
இந்திய அணி வீரர் ரவிந்திர ஜடேஜா அருமையான ஒரு ரன் அவுட்டையும், கேட்சையும் பிடித்து ஹீரோவாகினார். இந்த ஆட்டத்தில் மட்டும் ஜடேஜா ஒருரன் அவுட், இரு கேட்சுகளை பிடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பைப் போட்டியில் அதிகபட்சமாக ஒரு அணிக்காக 41 ரன்களே சேமித்துக்கொடுத்த வீரர் எனும் பெருமையையும் ஜடேஜா வைத்துள்ளார்.
மழையால் தடைபட்ட நேற்றைய ஆட்டத்தை இன்று இரு அணிகளும் தொடர்ந்தனர். 23 பந்துகள் வீசப்பட்டநிலையில் நியூஸிலாந்து அணி 28 ரன்கள் சேர்த்தது.
உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நேற்று நடந்தது. 46.1 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. களத்தில் ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், டாம் லாதம் 3 ரன்களுடனும் இருந்தனர்.
மீதமுள்ள 3.5 ஓவர்கள் இன்றைய ரிசர்வ் நாளில் இன்று நடத்தப்பட்டது. டெய்லர், லாதம் ஆட்டத்தைத் தொடங்கினர்.
பும்ரா வீசிய 48-வது ஓவரின் கடைசிப்பந்தில் டெய்லர் மிட்விக்கெட்டில் தட்டிவிட்டு ரன்ஓட முயன்றார். ஆனால், பந்தை பிடித்த ஜடேஜா டைரக்ட் ஹிட் முறையில் ரன் அவுட் செய்து வெளியே அனுப்பினார். டெய்லர் 74 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஓவரை புவனேஷ்குமார் வீச. முதல் பந்தில் லாதம் மிட்விக்கெட்டில் அடித்த பந்தை ஜடேஜா அருமையான கேட்ச் பிடித்து லாதமை 10 ரன்னில் அனுப்பினார். அடுத்து வந்த ஹென்றி, கடைசிப்பந்தில் லெக்திசையில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் வெளியேறினார். பும்ரா வீசிய கடைசி ஓவரை சான்ட்னரும், போல்ட்டும் விளையாடி 7 ரன்கள் சேர்த்தனர்.
50 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. சான்ட்னர் 9 ரன்னிலும், போல்ட் 3 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணித் தரப்பில் புவனேஷ் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.