Last Updated : 09 Jul, 2019 11:55 AM

 

Published : 09 Jul 2019 11:55 AM
Last Updated : 09 Jul 2019 11:55 AM

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் திராவிட் நியமனம்

இளம் கிரிக்கெட் வீரர்களை வளர்த்தெடுக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டை நியமித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பணியை ராகுல் திராவிட் கடந்த 1-ம் தேதியே ஏற்று செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில்இருந்த பணியால் திராவிட் பதவியேற்பது தாமதமானது.

பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு, இந்தியா சிமெண்ட்ஸ் பணிக்காலத்தை முடித்துவிட்டு வாருங்கள் அல்லது பதவியில் இருந்து விலகிவிட்டுவாருங்கள் என்று திராவிட்டிடம் தெரிவித்திருந்தது. ஏனென்றால், ஆதாயம் தரும் இரட்டைப் பதவியில் ஒருவர் இருப்பது சர்ச்சையானது. இதையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் திராவிட்டை பணியில் இருந்து  விடுவித்தது. இதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில்," தேசிய கிரிக்கெட் அகாடமியின் அனைத்துவிதமான கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளையும் இனி ராகுல் திராவிட் மேற்பார்வையிடுவார். வழிகாட்டல், பயிற்சி, பயிற்சியாளர், வீரர்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் கவனிப்பார்.

மேலும், தேசிய ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர்களுடன் இணைந்து ராகுல் திராவிட் அணிகளின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றுவார். குறிப்பாக இந்தியா ஏ, 19 வயதுக்குட்பட்டோர் அணி, 23 வயதுக்குட்பட்டோருக்கான அணி ஆகியவற்றில் பயிற்சி அளித்தல், வளர்ச்சித் திட்டங்களையும் திராவிட் கவனிப்பார்" எனத் தெரிவித்துள்ளது.

ராகுல் திராவிட் எத்தனை ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார் எனும் விவரத்தை பிசிசிஐ வெளியிடவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் திராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 36 சதம், 56 அரை சதங்கள் உள்பட 13 ஆயிரத்து 288 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 52 ரன்கள் சராசரி வைத்துள்ளார். 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய திராவிட் 12 சதங்கள், 83 அரை சதங்கள் உள்பட 10 ஆயிரத்து 889 ரன்கள் சேர்த்து சராசரியாக 39 ரன்கள் வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x