பேர்ஸ்டோ தொடர் சதம்; 30 ஓவர்களில் 194/1; கடைசி 20 ஓவர்களில் 111/7 : 305 ரன்களுக்கு இங்கிலாந்தை மட்டுப்படுத்திய நியூஸி.

பேர்ஸ்டோ தொடர் சதம்; 30 ஓவர்களில் 194/1; கடைசி 20 ஓவர்களில் 111/7 : 305 ரன்களுக்கு இங்கிலாந்தை மட்டுப்படுத்திய நியூஸி.
Updated on
2 min read

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது, அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ 99 பந்துகளில் 15 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 106 ரன்கள் எடுத்து தன் 2வது சதத்தை தொடர்ச்சியாக எடுத்தார்.

30 ஓவர்கள் முடிவில் 194/1 என்று இருந்த இங்கிலாந்து அணி கடைசி 20 ஒவர்களில் பந்தின் தையலைக் குறுக்காகப் பிடித்து வீசும் கட்டர்கள், ஸ்லோ பந்துகள் என்று கடைசியில் கிடுக்கிப்பிடி போட்டது நியூஸிலாந்து.

இருந்தாலும் இந்தப் பிட்சில் 305 ரன்களை விரட்டி ஜெயிப்பது கடினமே, ஏனெனில் பிட்ச் மந்தமாகி விட்டது, பந்துகள் மட்டைக்கு ஸ்ட்ரோக் அடிக்குமாறு வாகாக வராது. நியூஸிலாந்தும் 2 விக்கெட்டுகளை 46 ரன்களுக்கு இழந்து தவித்து வருகிறது.

இந்தியாவுக்கு எதிராக 111 ரன்களை விளாசிய ஜானி பேர்ஸ்டோ 99 பந்துகளில் 106 ரன்களை விளாசித் தள்ளினார்.  ஜேசன் ராய் 61 பந்துகளில் 60 ரன்கள் என்று மறுபுறம் சிலபல பிரமாதமான ஷாட்களை ஆட  123 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்தனர். ஜோ ரூட் இறங்கினார், இங்கிலாந்து அணி 31வது ஓவரில் 194/1 என்று 350 ரன்களையும் கடந்த இலக்கை நோக்கி வசதியாகச் சென்று கொண்டிருந்தது.

ஆனால் இப்போதுதான் பிட்ச் மந்தமாகத் தொடங்கியது. குறிப்பாக ட்ரெண்ட் போல்ட் சிறப்பாக வீசி (2/56) ஜோ ரூட் (24) விக்கெட்டைக கழற்றினார். இதன் மூலம் ஒரு சிறு சரிவு நிகழ அபாய சத நாயகன் பேர்ஸ்டோ, அதை விட அபாய ஜோஸ் பட்லர் (11) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட இங்கிலாந்து 214/4 என்று ஆனது.  தொடக்கத்தில் வீசிய மிட்செல் சாண்ட்னர் மீண்டும் வந்து பென் ஸ்டோக்ஸை (11) வீழ்த்த 248/5 என்று ஆனது இங்கிலாந்து.

இந்நிலையில் வழக்கமாக வெளுத்துக் கட்டும் இயான் மோர்கன் தொடர் விக்கெட் சரிவினாலும், பிட்சினாலும் சிலபல அபார ஸ்லோ கட்டர்கள் பந்து வீச்சினாலும் கட்டுப்படுத்தப்பட்டு 40 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். இந்த நிலையில் இது நல்ல ஸ்கோர் என்றே பார்க்கப்பட வேண்டும்.

ஆதில் ரஷீத் 12 பந்துகளில் 16,  லியாம் பிளென்கெட் 12 பந்துகளில் 15 ரன்கள் ஆகியோர் இங்கிலாந்து  300 ரன்களைக் கடக்க உதவினர்.

நியூஸிலாந்து தரப்பில் 2/54 என்று ஹென்றியும், 2/41 என்று ஜேம்ஸ் நீஷமும் நன்றாக வீசினர்.  லாக்கி பெர்குசன் காயத்தினால் ஆடவந்த டிம் சவுதி 9 ஓவர்களில் 70 ரன்கள் விளாசப்பட்டார்.

1983 உலகக்கோப்பைக்குப் பிறகு நியூஸிலாந்தை இங்கிலாந்து உலகக்கோப்பையில் வீழ்த்தியதில்லை ஆனால் இன்று நியூஸிலாந்து விரட்டலில் 58/2 என்று திணறுவதைப் பார்த்தால் நெட் ரன் ரேட்டை தக்கவைத்தால் போதும் என்று ஆடி தோற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in