Published : 10 Nov 2014 09:33 AM
Last Updated : 10 Nov 2014 09:33 AM

ஷிகர் தவன் விளாசல்; இந்தியாவுக்கு 3-வது வெற்றி, தொடரையும் கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா தொடரையும் கைப்பற்றியது.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஜடேஜாவுக்குப் பதிலாக குல்கர்னி சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் ரன்திவ், தமிகா பிரசாத் ஆகியோருக்குப் பதிலாக டி சில்வா, குலசேகரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் குஷல் பெரேரா 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, பின்னர் வந்த சங்ககாரா ரன் கணக்கைத் தொடங்காமலேயே வெளியேறினார். இதனால் 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை.

ஜெயவர்த்தனா சதம்

இதையடுத்து தில்ஷானுடன் இணைந்தார் ஜெயவர்த்தனா. நிதானமாக ஆடிய இந்த ஜோடி இலங்கையை சரிவிலிருந்து மீட்டது. தில்ஷான் 73 பந்துகளில் தனது 39-வது அரைசதத்தைப் பதிவு செய்ய, ஜெயவர்த்தனா 62 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த ஜோடியைப் பிரிக்க கோலி 6 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பலன் கிடைக்காததால் 25-வது ஓவரை வீச அம்பட்டி ராயுடுவை அழைத்தார். அதற்கு பலனும் கிடைத்தது. தில்ஷான் 53 ரன்களில் (80 பந்துகளில்) ராயுடு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தில்ஷான்-ஜெயவர்த்தனா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது.

பின்னர் வந்த மேத்யூஸ் (10), பிரியாஞ்சன் (2), டி சில்வா (2) ஆகியோரை அக்ஷர் பட்டேல் வெளியேற்ற, திசாரா பெரேராவை (1) உமேஷ் யாதவ் வீழ்த்தினார். இதனால் 158 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை. இதையடுத்து பிரசன்னா களமிறங்க, மறுமுனையில் அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து 17-வது சதத்தைப் (109 பந்துகளில்) பூர்த்தி செய்தார் ஜெயவர்த்தனா. அவர் 124 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு பிரசன்னா 29, குலசேகரா 7 ரன்களில் ஆட்டமிழக்க, 48.2 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை.

இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஷிகர் தவன் 91

பின்னர் பேட் செய்த இந்திய அணியில் அஜிங்க்ய ரஹானே-ஷிகர் தவன் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12 ஓவர்களில் 66 ரன்கள் சேர்த்தது. 47 பந்துகளைச் சந்தித்த ரஹானே 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து தவனுடன் இணைந்தார் அம்பட்டி ராயுடு. தொடர்ந்து சிறப்பாக ஆடிய தவன் 45 ரன்களில் இருந்தபோது டி சில்வா பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை எட்டினார். மறுமுனையில் தன் பங்குக்கு சிறப்பாக ஆடிய ராயுடு 46 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ரன் அவுட்டானார்.

இதையடுத்து விராட் கோலி களம்புகுந்தார். தவனும், கோலியும் சற்று வேகமாக விளையாட, குலசேகரா வீசிய 34-வது ஓவரில் 200 ரன்களை எட்டியது இந்தியா. ஆனால் அதே ஓவரில் நடுவரின் தவறான தீர்ப்புக்கு பலிகடாவானார் தவன். குலசேகரா வீசிய பவுன்சரை அடிக்க தவன் முற்பட்டபோது பந்து அவருடைய ஹெல்மெட்டில் பட்டு கீப்பரிடம் தஞ்சமானது. அப்போது இலங்கை வீரர்கள் அவுட் கேட்க, நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். 79 பந்துகளைச் சந்தித்த தவன் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்து சதமடிக்க முடியாத ஏமாற்றத்துடன் திரும்பினார்.

கோலி அரைசதம்

இதையடுத்து ரெய்னா களம்புகுந்தார். இதனிடையே கோலி 50 பந்துகளில் அரைசதமடித்தார். அவர் 61 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து விருத்திமான் சாஹா களமிறங்க, 44.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இந்தியா. ரெய்னா 18, சாஹா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கோலி அதிவேக 6,000

இந்தப் போட்டியில் அரைசதமடித்தபோது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை எட்டியவர் என்ற பெருமையைப் பெற்றார் விராட் கோலி. அவர் தனது 144-வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் 156 போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது.

ஷிகர் தவன் 2,000

இந்தப் போட்டியில் 45 ரன்கள் எடுத்தபோது 2,000 ரன்களை எட்டினார். தனது 49-வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ள தவன், அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்த இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தத்தில் அதிவேக 2000 ரன்களை எட்டியவர்கள் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளார்.

ஜெயவர்த்தனா 12,000

இந்தப் போட்டியில் 116 ரன்களை எடுத்தபோது சர்வதேச அளவில் ஒருநாள் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை எட்டிய 5-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஜெயவர்த்தனா. அவர் தனது 426-வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x