Published : 11 Jul 2019 08:33 PM
Last Updated : 11 Jul 2019 08:33 PM

ரிஷப் பந்த் தான் செய்த தவறை ஏற்கெனவே உணர்ந்து விட்டார்; நான் சாஸ்திரியிடம் அதை விவாதிக்கவில்லை: கோலி பேட்டி

உலகக்கோப்பை அரையிறுதி தோல்வியில் ‘இருதயம் உடைந்து’ போனதாக தெரிவித்த விராட் கோலி, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா பேரைக் குறிப்பிடாமல் அவர்கள் ஷாட் தேர்வு குறித்து அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

 

நாங்கள் பேட் செய்த போது முதல் 40 நிமிடங்களில் ஆட்டம் மாறிப்போய்விட்டது. 5 ரன்களுக்கு 3 விக்கெட் என்றால் அதிலிருந்து மீளுவது எப்போதும் கடினமே. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சும் எங்களுக்கு அந்த வாய்ப்புகளை வழங்கவில்லை. பீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்தி வைத்தனர்.

 

சவாலுக்கு நாங்கள் தயாராகவில்லை என்பதை ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு ஒன்றும் வெட்கமில்லை. அழுத்தமான தருணங்களில் நாங்கள் சரியாக ஆடவில்லை என்பதே உண்மை. தோல்வியை ஏற்க வேண்டும், அது நம் ஸ்கோர்போர்டில் பிரதிபலித்தது.

 

குறைந்த இலக்கு எனும்போது நியூஸிலாந்து போன்ற ஓரிரு அணிகள் மட்டுமே சர்க்கிளுக்குல் 7 பீல்டர்களை நிற்கவைத்து அழுத்தம் கொடுக்க முடியும்.  தேர்ட்மேனை உள்ளுக்குள் நிறுத்தினர், அப்போதே புரிந்தது, ஆட்டத்தை கடைசி வரை இழுத்தடிக்க அவர்கள் விரும்பவில்லை என்பது. 5 கேட்சிங் பீல்டர்களை ஒருநாள் போட்டிகளில் நிறுத்துகின்றனர். ஆகவே எங்களுக்கு எப்படி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தனர்.

 

இரண்டு பேட்ஸ்மென்கள் ஷாட் தேர்வு எனக்கு திருப்தி அளிக்கவில்லை, ஆனால் சாஸ்திரியுடன் விவாதித்தது அதுவல்ல. இலக்குகளை விரட்டும் போது மினி டார்கெட்டுகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியே நாங்கள் விவாதித்தோம், பந்த் அவுட் பற்றியானதல்ல அது.

 

அவர் உள்ளுணர்வுடன் ஆடக்கூடிய வீரர், பந்த், பாண்டியா கூட்டணி அமைத்தனர். 4 விக்கெட்டுகளை 24 ரன்களுக்கு இழந்த பிறகு அவர்கள் ஆடிய விதம் பாராட்டுக்குரியது. பந்த் இன்னும் இளைஞர்தான், நான் கூட சிறுவயதில் ஏகப்பட்ட தவறுகளை பேட்டிங்கில் செய்துள்ளேன். அவரும் கற்றுக் கொள்வார் நிச்சயம் அவர் நினைத்துப் பார்த்து திருந்துவார், இந்த ஷாட் அல்லாமல் வேறு ஷாட்டை ஆடியிருக்கலாமென்பதை அவர் உணர்ந்திருப்பார். அவர் ஏற்கெனவே தவறை உணர்ந்து விட்டார்.

 

இவர்கள் அனைவரும் நாட்டுக்காக ஆடுவதில் பெருமையும் உணர்வும் மிக்கவர்கள். ஆகவே தவறுகள் நடக்கும் போது இவர்கள்தான் அதிக ஏமாற்றமடைவார்கள். வெளியிலிருந்து பார்க்க அது தவறு என்று தெரியும், ஆனால் உள்ளுக்குள், நான் கூறுவதை நம்புங்கள், அவர்கள்தான் இந்த மாதிரி ஏமாற்றங்களை நினைத்து அதிக துயரமடைவார்கள்.

 

நிச்சயம் இவர்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் வலுவாக வருவார்கள்.  திறமை உள்ளது, ஆம் சில ஷாட்கள் தவறுதான் ஆனால் இது விளையாட்டில் சகஜமே. சரியல்ல என்று நினைக்கும் முடிவுகளை எடுப்பார்கள் ஆனால் தவறை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஏற்கெனவே அவர்கள் உணர்ந்து விட்டார்கள்.

 

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x