

டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாளில் பிரான்ஸூம் சுவிட்சர்லாந்தும் தலா ஓர் ஆட்டத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
பிரான்ஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ரோஜர் ஃபெடரருடன் சுவிட்சர்லாந்து அணி களமிறங்கியிருப்பதால் அந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்முறையாக டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் ரோஜர் ஃபெடரர் முதல் நாளில் தோல்வி கண்டது அந்நாட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அவர் 1-6, 4-6, 3-6 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸிடம் தோல்வி கண்டார்.
மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-1, 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவை வீழ்த்தினார். வெற்றிக்குப் பிறகு பேசிய வாவ்ரிங்கா, “ஒருவேளை பிரான்ஸ் அணியினர் ஃபெடரர் மீது அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். அதனால் என்னை மறந்திருக்கலாம்” என்றார்.
டேவிஸ் கோப்பை போட்டியில் பிரான்ஸ் 9 முறை சாம்பியனாகியுள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்து இறுதிப் போட்டி (1992) வரை மட்டுமே முன்னேறியுள்ளது.