Last Updated : 05 Jul, 2019 04:25 PM

 

Published : 05 Jul 2019 04:25 PM
Last Updated : 05 Jul 2019 04:25 PM

சச்சினின் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்த 18-வயது ஆப்கானிஸ்தான் வீரர்

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 27 ஆண்டுகால சாதனையை ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த 18வயது இக்ரம் அலி கில் முறியடித்துள்ளார்.

உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நேற்று ஹெடிங்லியில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 23 ரன்களில் தோற்கடித்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி. 9 ஆட்டங்களில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி ஒருவெற்றிகூட பெறாமல் வெளியேறியது. மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 வெற்றிகள் உள்ளிட்ட 5 புள்ளிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்தது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோற்றபோதிலும், அந்த அணியின் 18வயது வீரரும் விக்கெட் கீப்பருமான இக்ரம் அலி கில் செய்த சாதனையும், சச்சினின் சாதனையை முறியடித்ததும் அணிக்கு மிகப்பெரிய ஆறுதலான விஷயமாக அமைந்தது.

ஆப்கானிஸ்தான் வீரர் இக்ரம்அலி அகிலுக்கு தற்போது 18 வயதாகிறது. கடைசி ஆட்டத்தில் இக்ரம் அலி 92 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தார்.

இதற்கு முன் உலகக் கோப்பையில் மிகக் குறைந்தவயதில் அதிகமான ஸ்கோர் அடித்த வீரர் எனும் சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்தார். கடந்த 1992-ம் ஆண்டு நியூஸிலாந்தில் நடந்த ஆட்டத்தில் 84 ரன்களை சச்சின் சேர்த்திருந்தார். அந்த சாதனையை இதுவரை கிரிக்கெட் உலகில் எந்த வீரரும் முறியடிக்கவில்லை. அப்போது சச்சினுக்கு 18 வயது ஆகி இருந்தது.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் இக்ரம் அலி அகில் 86 ரன்கள் சேர்த்ததன் மூலம்,  27 ஆண்டுகளாக முறியடிக்காமல் இருந்த சச்சினின் சாதனையை  இக்ரம் அலி முறியடித்துவிட்டார்.

இலங்கை வீரர் சங்கக்கரா ரசிகராகவும், முன்மாதிரியாகவும் வைத்து இக்ரம் அகில் விளையாடி வருகிறார். அவர் இந்த சாதனை குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துவிட்டேன் என்று நினைக்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், குமார் சங்கக்கராவின் ஆட்டம்தான் எனக்கு எப்போதும் மனதில் இருக்கிறது. நான் பேட்டிங் செய்தாலை சங்கக்கராதான் நினைவுக்கு வருகிறார்.

சங்கக்கராவின் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யும் திறன், பவுண்டரிகள் அடிப்பது ஆகியவைதான் அவரை உலகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியது. அவரைப்போலவே நான் விளையாட பழகிவருகிறேன். ஆப்கானிஸ்தான அணியில் அதிகபட்சமாக 86 ரன்கள் அடித்தது நான்தான் என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. யாரும் கடந்த 9 போட்டிகளில் இந்த அளவு ரன்களை அடிக்கவில்லை என்பது வருத்தமாக இருந்தது. இந்த தொடரில் எனக்கு கிடைத்த அனுபவம் அடுத்த கட்டத்துக்கு என்னை நகர்த்தும் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x