Last Updated : 01 Jul, 2019 03:17 PM

 

Published : 01 Jul 2019 03:17 PM
Last Updated : 01 Jul 2019 03:17 PM

தோனி பவுண்டரி அடிக்க முயற்சித்தார்; ஆனால்...: விராட் கோலி ஆதரவு

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் தோனி பவுண்டரிகள் அடிக்க முயற்சித்தார். ஆனால், ஆடுகளம் தட்டையாக இருந்ததாலும், பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாலும் முடியவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

இங்கிலாந்து, இந்தியா இடையேயான உலகக்கோப்பை போட்டியின் முக்கியமான லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் சேர்த்தது. 338 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் சேர்த்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது.

தோனி 31 பந்துகளில் 42 ரன்களும், கேதார் ஜாதவ் 13 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

45-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தபின் இந்திய அணியின் வெற்றிக்கு 71 ரன்கள் கடைசி 5 ஓவர்களில் தேவைப்பட்டது. தோனியும், ஜாதவ்வும் களத்தில் இருந்தனர். கிரேட் ஃபினிஷர் என்று பெயரெடுத்துள்ள தோனி, நிச்சயம் வெற்றிக்கு அணியைக் கொண்டு செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தோனி பேட்டிங் செய்ய மிகவும் தடுமாறினார். கடைசி 31 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதில் 7 டாட் பந்துகளும், 20 ஒற்றை ரன்களும் எடுக்கப்பட்டன.

போட்டி முடிந்த பின் கேப்டன் விராட் கோலி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டோம் என்று நினைக்கவில்லை. ஏனென்றால், ஆடுகளம் தட்டையாக இருந்தது. இலக்கை விரட்டும் வகையில், ஸ்கோரை அடித்தோம், நெருங்கினோம். ஆனால், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது.

ஒருவேளை நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால், முக்கியமான விக்கெட்டுகளை இழந்திருக்கமாட்டோம். போட்டியின் முடிவும் வித்தியாசமானதாக மாறியிருக்கும். வெற்றி பெறுவதற்கு எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. பாண்டியா, பந்த் இருக்கும்போது அடித்த சில ஷாட்களால், ஆட்டம் இலக்கை நோக்கி நெருங்கியது.

இருவரும் பேட் செய்த விதத்தைப் பார்த்து இங்கிலாந்து வீரர்கள் சிறிது அச்சம் அடைந்தனர். நாங்கள் சேஸிங்கின் போது விக்கெட்டுகளை இழந்தது, எங்களுக்கு உதவவில்லை.

தோனியும், கேதார் ஜாதவ்வும் என்ன பேசி எப்படி விளையாடினார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை தோனி பவுண்டரிகள் அடிக்க பலமுறை முயற்சித்தார், ஆனால், அவருக்கு அது சரியாக அமையவில்லை.

இங்கிலாந்து அணியினர் நல்ல லைன்-லென்த்தில் பந்துவீசினார்கள். நாங்கள் விளையாடிய முறை குறித்து ஆலோசிப்போம். அடுத்த போட்டியில் தவறைத் திருத்திக் கொள்வோம்.

நாங்கள் இப்போதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். ஓய்வறையிலும் கிரிக்கெட் குறித்து ஆலோசிக்கிறோம். அதேசமயம், எதிரணியினர் சிறப்பாக விளையாடினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கிலாந்து அணியினர் தங்களின் திட்டங்களை நன்கு திட்டமிட்டு செயல்படுத்தினார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

போட்டியில் டாஸ் முக்கியப் பங்கு வகித்தது. ஆடுகளத்தில் பவுண்டரிகளின் அளவைப் பார்த்தால் இடதுபுறம் தூரம் மிகக்குறைவாக இருந்தது. சர்வதேசப் போட்டிகளில் பவுண்டரியின் அளவு 59 மீட்டர் இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் ஆடுகளம் தட்டையாக இருந்ததும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதுபோன்ற சம்பவங்களால் அடிக்கடி நடக்கின்றன. மைதானத்தில் பவுண்டரி அளவு குறுகியதாக இருப்பதால், பேட்ஸ்மேன் ஸ்வீப் ஷாட் அடித்தால்கூட எளிதாக சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் சென்றுவிடுகிறது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் அடித்து விளையாடும் போது அவர்களின் ரன் ரேட்டைத் தடுக்க முடியாமல் போனது.

ஒருகட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால், அந்த அணி 360 ரன்களை எட்டும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பந்துவீச்சில் நாங்கள் கொடுத்த நெருக்கடியால், 20 ரன்கள் வரை குறைக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்து அணியை 330 ரன்களுக்குள் சுருட்டியது மகிழ்ச்சிதான்''.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

இந்தியாவின் தோல்விக்கு தோனி மட்டும்தான் காரணமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x