Last Updated : 07 Jul, 2019 07:17 AM

 

Published : 07 Jul 2019 07:17 AM
Last Updated : 07 Jul 2019 07:17 AM

ரோஹித் சாதனை, ராகுல் அசத்தல் சதம்: இலங்கையை பந்தாடிய இந்திய அணி: அரையிறுதியில் நியூஸிலாந்துடன் மோதல்

ரோஹித் சர்மாவின் சாதனை சதம், ராகுலின் அபார சதம் ஆகியவற்றால் லீட்ஸில் நேற்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் 7 வெற்றிகள், ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் ரத்து என 15 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீ்க் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்ததால் 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தது.

இந்திய அணி முதலிடத்தைப் பிடித்ததால், வரும் செவ்வாய்கிழமை மான்செஸ்டர், ஓல்டுடிராபோர்டு மைதானத்தில் நடக்கும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில்  கேன் வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது. இங்குதான் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் 2-வது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திேரலியாவும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்தது. 265 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவர்களில்  3 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணியைப் பொருத்தவரை ரோஹித் சர்மா, ராகுல் கூட்டணிதான் வெற்றிக்கு முக்கியக் காரணம். 265 ரன்கள் இலக்கில் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தை அமைத்தனர். உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை தொடக்க வீரர்கள் 4 முறை 100 ரன்களைக் கடந்தது இந்திய ஜோடி மட்டுமே. இது உலகக்கோப்பையில் முக்கிய சாதனை.

ரோஹித் சர்மா மட்டும் நேற்று பலசாதனைகளுக்கு சொந்தக்காரராகினார். ஆட்ட நாயகன் விருதையும் ரோஹித் சர்மா வென்றார்.

 உலகக்கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்த வீரர் எனும் பெருமையை ரோஹித் பெற்றார். உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து சங்கக்கராவின் 4-சதங்கள் சாதனையை முறியடித்து ரோஹித் உலக சாதனை படைத்தார்.

ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த சச்சின் 673 ரன்கள் சாதனையை கடப்பதற்கு ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 26 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அடுத்து வரும் போட்டிகளில் இதை அடைவார் என நம்பலாம். தற்போது ரோஹித் சர்மா 647 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்

அதேபோல கே.எல். ராகுல் தனது ஒருநாள் போட்டியி்ல 2-வது சதத்தை கடந்த 2016-ம் ஆண்டுக்குப்பின் பதிவு செய்தார்.

வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நேற்று 100-வது விக்கெட்டை தனது 57-வது ஆட்டத்தில் வீழ்த்தினார். இதன் மூலம் வேகமாக 100-வது விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரர்களில் ஷமிக்கு அடுத்து 2-வது இடத்தில் பும்ரா உள்ளார். ஷமி 56-ஆட்டத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

265 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்தய அணி களமிறங்கியது. ராகுல், ரோஹித் சர்மா வலுவான தொடக்கத்தை அமைத்தனர். ஆடுகளம் மதியத்துக்கு மேல் பேட்ஸ்மேனுக்கு நன்கு ஒத்துழைத்ததால், இலங்கை பந்துவீச்சை இருவரும் வெளுத்துக்கட்டினர். 7 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களையும் 18-வது ஓவரில் 100 ரன்களையும் எட்டியது.

பவுண்டரிகளாக விளாசிய ரோஹித் சர்மா, டிசில்வா ஓவரில் 76 மீட்டருக்கு சிக்ஸர் அடித்து 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதேமசமயம் ராகுல் நிதான ஆட்டத்தை கடைபிடித்து 67 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்காவின் பந்துவீச்சு நேற்று எடுபடவில்லை யார்கர் வீசு முயன்று அனைத்து பந்துகளும் ரோஹித் சர்மாவுக்கு ஓவர்பிட்சாக அமைய, அதை லெக்திசையில் அருமையாக ப்ளிக் செய்து பவுண்டரிகளாக மாற்றினார். அதேபோல், இலங்கை சுழற்பந்துவீச்சாளர்களையும் ரோஹித்சர்மா தனது பேட்டால் வதம் செய்தார்.

அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 92 பந்துகளி்ல் சதம் அடித்து, ஒருநாள் அரங்கில் தனது 27-வது சதத்தை பதிவு செய்தார். 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் உள்பட 103 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து விராட் கோலி களமிறங்கி, ராகுலுடன் சேர்ந்தார். சதத்தை நோக்கி நகர்ந்த ராகுலுக்கு வாய்ப்புகளை கோலி வழங்கி  அவரை வழிநடத்தினார். 109 பந்துகளில் ராகுல் ஒருநாள் அரங்கில் தனது 2-வது சத்ததை பதிவு செய்தார். அதன்பின் சிறிதுநேரமே களத்தில் இருந்த ராகுல் 111 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரி அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ரிஷப் பந்த் 4 ரன்கள் சேர்த்த நிலையில் உதானா பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார். அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா, ராகுலுடன் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். விராட் கோலி, 34 ரன்னிலும், பாண்டியா 7  ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 43.3 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டில் வென்றது. இலங்கை தரப்பில்  மலிங்கா 10 ஓவர்கள் வீசி 82 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. முதல் 4 விக்கெட்டுகள் மிக வேகமாக விழுந்தன. கருணாரத்னே 10ரன்னில் பும்ரா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்தார், குஷால் பெரேரா 18 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பெர்ணான்டோ 20 ரன்னில் பாண்டியா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜடேஜா பந்துவீச்சில் மெண்டிஸ் 3 ரன்னிலும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ெபவிலியன் திரும்பினார்

55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி திணறியது. 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ், திரிமானே இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக ஆடி இருவரும் ரன்களைச் சேர்த்தனர். மேத்யூஸ் 76 பந்துகளிலும், திரமானே 63 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.

53ரன்கள் சேர்த்த நிலையில் திரிமானே குல்தீப் பந்துவீச்சில் விக்கெட் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 124 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர்.

நிதானமான ஆடிய மேத்யூஸ் 112 பந்துகளில் சதத்தை பதிவு செய்து 113 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 10 பவண்டரிகள் அடங்கும். பெரேரா ஒரு ரன்னில் வெளியேறினார்.

டி சில்வா 29 ரன்னிலும், உதானா ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியத்தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x