ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் முத்கல் கமிட்டி என்னை விசாரிக்கவில்லை: ஓவைஸ் ஷா மறுப்பு

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் முத்கல் கமிட்டி என்னை விசாரிக்கவில்லை: ஓவைஸ் ஷா மறுப்பு
Updated on
1 min read

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய முத்கல் கமிட்டி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஓவைஸ் ஷா மீது குற்றம்சாட்டியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

முத்கல் கமிட்டி என்னை விசாரிக் காத நிலையில் உச்ச நீதிமன்றத் தில் எனது பெயர் குறிப்பிடப் பட்டது ஏமாற்றமளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முத்கல் கமிட்டி அறிக்கையில் குற்றம் சாட்டப் பட்டுள்ள 7 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டன.

ஐசிசி தலைவர் என்.சீனிவாசன், அவருடைய மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா, ஐபிஎல் தலைமை செயல் அதிகாரி சுந்தர் ராமன் ஆகியோருடன் மேலும் 3 பேருடைய பெயர்களையும் நீதிபதிகள் வெளியிட்டனர். ஆனால் அவர்கள் 3 பேரும் கிரிக்கெட் வீரர்கள் என தெரிய வந்ததையடுத்து அவர்களின் பெயரை வெளியிடுவதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

அந்த 3 வீரர்களில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஓவைஸ் ஷாவும் ஒருவர் என தெரியவந்தது. இதையடுத்து அவர் கூறியிருப்பதாவது: இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் என்னிடம் இருந்து எந்த விவரங்களையும் கேட்கவில்லை. அப்படியிருக்கையில் எனது பெயர் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது.

நான் விசாரணை வளையத்துக்குள் இருப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது. முத்கல் கமிட்டி அறிக்கையில் எனது பெயரும் இடம்பெற்றிருப்பது எனக்கு இன்றுதான் (நேற்று) தெரிந்தது. முத்கல் கமிட்டி என்னை விசாரிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார்.

பிசிசிஐ செயற்குழு 18-ம் தேதி கூடுகிறது

பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக அதன் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் சீனிவாசன் பங்கேற்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்போது நீதிமன்ற உத்தரவு உள்ளிட்டவை குறித்தும், சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படும் என தெரிகிறது. பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்துக்கான புதிய தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in