Published : 12 Jul 2019 04:48 PM
Last Updated : 12 Jul 2019 04:48 PM

கடந்த 2 ஆண்டுகளாக அதிர்ச்சிகர முடிவுகளை எடுக்கின்றனர், மக்களுக்கு தெரிந்தாக வேண்டும்.. சொல்லுங்கள்: கோலி, ரவிசாஸ்திரிக்கு கவாஸ்கர் வலியுறுத்தல்

இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிராக ஸ்விங் பவுலிங்கிற்குச் சாதகமான நிலைமைகளில் சரணடைந்தது குறித்து சுனில் கவாஸ்கர் தெரிவித்த வார்த்தை “திகைப்பை ஏற்படுத்துகிறது” என்றார். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கேப்டன் விராட் கோலி, ரவிசாஸ்திரி உள்ளிட்ட அணி நிர்வாகம் எடுக்கும் சிலபல முடிவுகளும் திகைப்பூட்டுபவையாக உள்ளன என்றார் சுனில் கவாஸ்கர்.

 

இந்திய ரசிகர்கள் மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஏன் தப்புத்தப்பான முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது பற்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்கிறார் சுனில் கவாஸ்கர்:

 

24/4 என்ற நிலையில் இரண்டு தாக்குதல் வீரர்களான பாண்டியா, பந்த் இறக்கப்படுவது சரியல்ல, தோனி இறங்கி ரிஷப் பந்தை வழிநடத்தியிருக்க வேண்டும்.  பந்துகள் ஸ்விங் ஆகிக் கொண்டிருக்கும் போது அடித்து நொறுக்கும் வீரர்கள் இருவரை அங்கு இறக்கியது அதிர்ச்சிகரமாக உள்ளது.

 

விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள், கடந்த 2 ஆண்டுகளாக அதிர்ச்சிகர முடிவுகள் பல எடுக்கப்பட்டுள்ளன, அணி நிர்வாகம்தான் இந்தத் தவறுகளுக்குப் பொறுப்பு. அம்பாதி ராயுடு விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் ஆடியிருக்க வேண்டும். மயங்க் அகர்வாலை திடீரென அழைத்ததை, ராயுடுவை ஒதுக்கியதை எப்படி எனக்கு விளக்கப் போகிறீர்கள்? மயங்க் இன்னும் ஒரு ஒருநாள் போட்டியில் கூட ஆடவில்லை. அவரைக் கொண்டு போய் உலகக்கோப்பை அரையிறுதி, இறுதிப் போட்டியில் அறிமுகம் செய்வார்களா? ராயுடுதான் ஆடியிருக்க வேண்டும்.

 

கடந்த ஆண்டு 4ம் இடத்துக்கு வீரர் கிடைத்து விட்டார் என்று சொன்னீர்கள், அந்த இடம் இப்போது என்னவாயிற்று, அவர் ஒரிஜினல் அணியிலிருந்து நீக்கப்பட்டார். விஜய் சங்கர் துரதிர்ஷ்டமாக காயமடைந்து விட்டார். ஆனால் மயங்க் அகர்வாலை அழைக்கிறீர்கள், இது முற்றிலும் புரியவில்லை, இந்திய மக்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.

 

இந்த முடிவுகளெல்லாம் அணித்தேர்வுக்குழுவின் முடிவல்ல, அணி நிர்வாகத்தின் முடிவு (கோலி, ரவிசாஸ்திரி), நீங்கள் தவறு என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் தவறாகிப் போனதால் எங்களுக்கு சரியான பதில் தேவை.

 

ரஹானே 4ம் நிலைக்கு உரிய வீரர், நீங்களாகவே திடீரென அவர் தொடக்க வீரர், மிடில் ஓவர்களில் அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை என்று நீங்களாகவே ஒரு முடிவுக்கு வருகிறீர்கள், எவ்வளவு எவ்வளவு சாக்குப் போக்குகளை கேட்டு விட்டோம். மான்செஸ்டரில் அந்த நிலையில் உத்தி ரீதியாக சரியான ஒரு வீரர் தேவை. அப்படி ஒரு வீரர் இருந்தால் பிற்பாடு பாண்டியா, தோனி ஆடுவதற்கு சரியாக இருந்திருக்கும்.

 

இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x