

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் இடது கை வேகப்பந்து வீச்சு மேதையுமான வாசிம் அக்ரம், சக வீரர் ஷோயப் மாலிக் ஓய்வு பெறப்போவதையடுத்து அவருக்கு ஒரு பிரியாவிடை டின்னர் அளிக்கலாம், ஆனால் பிரியாவிடை மேட்ச் சரியாக வராது என்று தெரிவித்துள்ளார்.
பாக். பத்திரிகையாளர் ஒருவரிடம் வாசிம் அக்ரம் பேசியதாவது:
“உலகக்கோப்பை முடிந்தவுடன் ஓய்வு பெறுகிறேன் என்று அவர் அறிவித்துள்ளார், துரதிர்ஷ்டவசமாக அவரது கடைசி போட்டிகள் அவருக்கு நன்றாக அமையவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அவர் பல நல்லதுகளைச் செய்துள்ளார்.
உலகக்கோப்பையில் பல போட்டிகளில் அவர் இல்லை, இருமுறை டக் அவுட் ஆனார், ஆனால் இது எந்த ஒரு வீரருக்கும் ஏற்படக்கூடியதுதான், பாகிஸ்தானுக்காக அவரது சேவையை நாம் நினைவில் கொள்ளவேண்டும், ஏனெனில் அவர் நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.
பிரியாவிடை போட்டியா? இது கிளப் கிரிக்கெட் கிடையாது, சர்வதேச போட்டியை எப்படி பிரியாவிடை போட்டியாக மாற்றமுடியும், அவருக்காக ஒரு நல்ல பிரியாவிடை டின்னர் விருந்து அளிக்கலாம்” என்றார் வாசிம் அக்ரம்.
37 வயதாகும் ஷோயப் மாலிக் உலகக்கோப்பையில் இம்முறை 3 போட்டிகளில்தான் ஆடினார், அதில் இரண்டு டக் அவுட்டுகள். இந்தியரான சானியா மிர்சாவை திருமணம் செய்தது முதல் அவர் மீது கடும் விமர்சனங்களும், கேலிகளும் அவதூறுகளும் பரப்பப்பட்டு வந்தது அவருக்கு கடும் வேதனையளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.