Last Updated : 03 Jul, 2019 01:49 PM

 

Published : 03 Jul 2019 01:49 PM
Last Updated : 03 Jul 2019 01:49 PM

வங்கதேச அணியில் ஒரு சாதனையாளர்: புதிய வரலாறு படைத்த சகிப் அல் ஹசன்

வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டர் சகிப் அல் ஹசன் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியில் 500 ரன்களும், 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் எனும் புதிய வரலாற்றை சகிப் அல் ஹசன் பதிவு செய்துள்ளார்.

எட்பாஸ்டன் நகரில் இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் 66 ரன்கள் சேர்த்து சகிப் அல்ஹசன் ஆட்டமிழந்தார். இதன் மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் 542 ரன்கள் சேர்த்து அதிக ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ரோஹித் சர்மா 544 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் 7 ஆட்டங்களில் சகிப் அல் ஹசன் 2 சதங்கள், 4 அரைசதங்கள் அடித்துள்ளார், 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆனால், இதுவரை எந்த ஒருவீரரும் உலகக் கோப்பைப் போட்டியில் 500 ரன்கள் அடித்து, 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. முதல்முறையாக இதை சகிப் அல் ஹசன் செய்து வரலாறு படைத்துள்ளார்.

இதற்கு முன் நியூஸிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் 10 ஆட்டங்களில் 499 ரன்களும், 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் சகிப் அல் ஹசன் அதிகபட்சமாக மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 124 ரன்கள் சேர்த்தார்.ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x