Last Updated : 10 Jul, 2019 11:14 AM

 

Published : 10 Jul 2019 11:14 AM
Last Updated : 10 Jul 2019 11:14 AM

ஓல்டு டிராபோர்ட் பிட்ச் அல்ல, குப்பை: இந்தியா-நியூஸி ஆடுகளத்தை வறுத்தெடுத்த முன்னாள் வீரர்கள்

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் நடக்கும் ஓல்டுடிராபோர்ட் ஆடுகளம் "மெதுவான ஆடுகளம், குப்பையான ஆடுகளம்" என்று முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

உலகக் கோப்பைப் போட்டியில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் மான்செஸ்டரில் ஓல்டுடிராபோர்டில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஆடுகளம் பேட்டிங்கிற்கும் சாதகமில்லாமல், பந்துவீச்சுக்கும் சாதகமில்லாமல் மந்தமாக இருந்ததால் அடித்து விளையாடவும் முடியவில்லை, பந்துகளும் ஸ்விங் ஆவதிலும் சிக்கல் இருந்தது. இதனால் ஸ்கோர் செய்ய நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

ஓல்டுடிராபோர்ட் ஆடுகளம் மோசமான நிலையில் இருப்பதை முன்னாள் வீரர்கள் பலர் காட்டமாக விமர்சித்துள்ளனர். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார் வாஹ் கூறுகையில், " ஓல்டுடிராபோர்ட் ஆடுகளம் சிறந்தது என்று கூற முடியாது. மிகவும் மெதுவான ஆடுகளம், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு லேசாக ஒத்துழைக்கிறது. நியூஸிலாந்து அணி 240 ரன்களுக்கு மேல் அடித்தால்தான் வெற்றி பெற முடியும் " எனத் தெரிவித்தார்.

முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் பட்சர் கூறுகையில், " உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தில் இருக்கும் ஆடுகளங்கள் அனைத்தும் குப்பையாக இருக்கின்றன. இரு அணிகளுக்கும் சமமாக இல்லாமல், இருவிதமாக பந்துவீசும் போது ஆடுகளம் மாறுபடுகிறது, 95 ஓவர்கள் மோசமாக இருந்து கடைசி 5 ஓவர்கள் மட்டுமே சிறப்பாக இருப்பதற்கு பெயர் ஆடுகளமாக "குப்பை" " எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு இங்கிலாந்து வீரர் கிரேம் பிளவர் ட்விட்டரில் கூறுகையில், " உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் நடக்கும் ஆடுகளம் இவ்வளவு மோசமானதாக இருப்பதா. பார்வையாளர்களும், ரசிகர்களும் ஏராளமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி போட்டியை காணவந்திருக்கிறார்கள். ஆடுகளத்தை இப்படி தரமற்றதாக அமைத்துள்ளது வேதனையாக இருக்கிறது. இது இங்கிலாந்துக்கு கவுரவ குறைச்சல் " என  தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பால் நியூமேன் கூறுகையில் " ஓல்டுடிராபோர்ட் ஆடுகளம் பயங்கரமாக இருக்கிறது. உலகக் கோப்பையில் ஆடுகளுங்களுக்கு எல்லாம் என்ன கேடு வந்துவிட்டது. ஐசிசி ஏதும் உத்தரவிட்டதா" எனத் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐசிசி, ஆடுகளம் வடிவமைப்பதில் எந்தவிதமான பாரபட்சமும் காட்டவில்லை என தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், " ஐசிசி நடத்தும் போட்டிகளில், ஆடுகளங்கள் சர்வதேச தரத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் தயாரிப்போம். இங்கிலாந்து சூழலுக்கு ஏற்றவகையில்தான் ஆடுகளங்கள் தயாரிக்கபட்டன. ஆடுகளங்கள் தயாரிப்பதில் எந்தவிதமான பாரபட்சமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x