

லார்ட்ஸில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 43வது போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 315 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்று முடிந்தது, பாக். அணியின் இமாம் உல் ஹக் 100 ரன்களையும், பாபர் ஆஸம் உண்மையில் ‘ஆஸம்’தான் இவர் 96 ரன்களையும் அனாயசமாக எடுத்தனர், வங்கதேசத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில் வங்கதேச அணியை பாகிஸ்தான் அணி 7 ரன்கள் அல்லது அதற்கும் குறைவாகச் சுருட்ட வேண்டும், ஆகவே இது நடக்காது என்பதை விட வங்கதேசத்தின் விரட்டல் சுவாரசியமூட்டுவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தின் ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் கலக்கினார் 10 ஓவர்கள் வீசி வெறும் 30 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், அதுவும் முக்கிய விக்கெட்டான ஹபீஸ் (27) விக்கெட்டை கைப்பற்றினார்.
இமாம் உல் ஹக் 100 பந்துகளில் 7 பவுண்டரிகளுஅன் 100 ரன்களையும், பாபர் ஆஸம் 98 பந்துகளில் கண்ணில் ஒத்திக் கொள்ளும் அழகான 11 பவுண்டரிகளுடன் 96 ரன்களையும் எடுக்க இருவரும் சேர்ந்து 157 ரன்களைச் சேர்த்தது 315-ல் முக்கிய பங்களிப்பு ஆகும், கடைசியில் இமாத் வாசிம் 26 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 43 ரன்கள் விளாசினார்.
முஸ்தபிசுர் ரஹ்மான் தன் 100வது விக்கெட்டைக் கைப்பற்றியதோடு இந்த உலகக்கோப்பையில் 20 விக்கெட்டுகளுடன் முடிந்துள்ளார். முஸ்தபிசுர் ரஹ்மான் 75 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கலாம் ஆனால் அவரது மீட்டெழுச்சி அற்புதமாகும். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக அவர் எப்போதும் உள்ளார், அபாயகர இமாத் வாசிம், முகமது ஆமீரை தொடர் பந்துகளில் பெவிலியன் அனுப்பினார்.
பாகிஸ்தான் அணி 246/2 என்று 42வது ஓவர் வரை இருந்தது, ஸ்கோர் மேலும் 340 என்று சென்று விடாமல் தடுத்ததில்தான் முஸ்தபிசுர் ரஹ்மான் நிற்கிறார், மெஹதி ஹசனையும் சேர்த்துக் கொள்ளலாம் .
,மொகமது ஹபீஸ் (27), வஹாப் ரியாஸ் (2), சர்பராஸ் அகமட்( 3), ஹாரிஸ் சோஹைல் (6) ஆகியோர் சோபிக்காத நிலையில் இமாத் வாசிம் இன்னிங்ஸ் 300 ரன்களைக் கடக்க உதவியது. சர்பராஸ் அகமட் பாவம் இமாத் வாசிம் ஷாட்டில் கையில் அடி வாங்கி பாதியிலேயே பெவிலியன் திரும்ப நேரிட்டது. பதிலி விக்கெட் கீப்பரும் பாகிஸ்தான் வசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.