Last Updated : 29 Jun, 2019 01:44 PM

 

Published : 29 Jun 2019 01:44 PM
Last Updated : 29 Jun 2019 01:44 PM

இந்தியாவுடனான ஆட்டத்தில் ஒழுங்கீன செயல்: மே.இ.தீவுகள் வீரர் பிராத்வெய்ட்டுக்கு அபராதம்

மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிராக நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்த கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கார்லோஸ் பிராத்வெய்ட்டுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

மான்செஸ்டர் ஓல்டுடிராபோர்ட் நகரில் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இந்த ஆட்டத்தில் 42-வது ஓவரை மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கார்லோஸ் பிராத்வெய்ட் பந்துவீசினார். களத்தில் தோனி, ஹர்திக் பாண்டியா இருந்தார். ஹர்திக்  பாண்டியா  பேட் செய்ய, பிராத்வெய்ட் வீசிய பந்து வைடாக சென்றது. நடுவர் அதற்கு வைடு தெரிவித்தார்.

அந்த வைடு பந்துக்கு மாறாக மீண்டும் ஒரு பந்து வீசினார். அப்போது ஹர்திக் பாண்டியாவின் இடதுபுறம் பந்து ஒதுங்கிச் செல்லவே அவர் விலகிக் கொண்டார். அப்போது அந்த பந்தையும் நடுவர் வைடு என அறிவித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த பந்துவீச்சாளர் பிராத்வெய்ட், நடுவர் ரிச்சார்ட் கெட்டில்பாராவிடம் எதற்காக வைடு கொடுத்தீர்கள் என்று வாக்குவாதம் செய்தார். போட்டி முடிந்தபின் களநடுவர்கள் ரிச்சார்ட் கெட்டில்பாரோ, அலீம்தார், மைக்கோல் கோவ், இல்லிங்வொர்த் ஆகியோர் போட்டி நடுவர் கிறிஸ் பிராட்டிடம் பிராத்வெய்ட் குறித்து புகார் செய்தார்.

களநடுவர் கிறிஸ்பிராட் போட்டி முடிந்தபின் பிராத்வெய்ட்டை அழைத்து புகார் குறித்து விசாரணை நடத்தினார். பிராத்வெய்ட் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால், ஐசிசி ஒழுங்குவிதிமுறை 2.8பிரிவை மீறிய குற்றத்துக்காக பிராத்வெய்டுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15சதவீதம் அபராதமும், ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கி உத்தரவிட்டார்.

இத்துடன், இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மட்டும் பிராத்வெய்ட் 2 டீமெரிக் புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 14-ம் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரிடம் வாக்குவாதம் செய்ததால், ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x