Published : 29 Jun 2019 07:20 PM
Last Updated : 29 Jun 2019 07:20 PM

ஒருவர் கூட அரைசதம் இல்லை: ஷாஹின் அஃப்ரீடி 4 விக்கெட்: பாக். பந்து வீச்சில் 227 ரன்களை எடுத்த ஆப்கானிஸ்தான்

லீட்ஸில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 36வது போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.

 

ஆப்கானிஸ்தான் தரப்பில் முன்னால் கேப்டன் அஷ்கர் ஆப்கான் அதிரடியாக 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 ரன்களையும் நஜ்புல்லா ஸத்ரான் 54 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்களையும் அதிகபட்சமாக எடுக்க தொடக்க வீரர் ரஹ்மத் ஷா 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார்.

 

தொடக்கத்திலேயே வீசிய இடது கை பாக். ஸ்பின்னர் இமாத் வாசிம் 48 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் அன்று நியூஸிலாந்து போட்டியில் கலக்கியது போல் இன்றும் கலக்கி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து ஹாட்ரிக் வாய்ப்பைப் பெற்றார், ஆனால் ஹாட்ரிக் எடுக்க முடியவில்லை, இவர் 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வஹாப் ரியாஸ் படு சிக்கனமாக வீசி 8 ஓவர் 29 ரன்கள் 2 விக்கெட். ஆமிரும் 10 ஓவர்களில் 41 ரன்களையே கொடுத்தார் விக்கெட் இல்லை. லெக் ஸ்பின்னர் ஷதாப் கான் 44 ரன்களுக்கு 1 விக்கெட்.

 

ஸ்பின்னர்களுக்கு நன்றாக பந்துகள் திரும்புவதால் பாகிஸ்தான் ரஷீத்கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி ஆகியோரை மிகவும் கவனமாக ஆடுவது அவசியமாகிறது, அவசரப்பட்டு ஆட்டமிழந்தால் 227 ரன்களை விரட்டுவதில் தங்களைத் தாங்களே சிக்கலுக்குள்ளாக்குவதோடு அரையிறுதி வாய்ப்பும் பறிபோகும்.

 

ஆப்கானிஸ்தான் முதல் 10 ஒவர்களில் 46/2, பிறகு 11ம் ஓவர் முதல் 40ம் ஓவர் வரை 138/4,  41-50: 43/3 என்ற ரீதியில் ரன்களை எடுத்தது.  மொத்தம் 174 டாட்பால்களை பாகிஸ்தான் வீசியது, மீதமுள்ள பந்துகளில் ஆப்கானிஸ்தான் 21 பவுண்டரிகள் 2 சிக்சர்கள். அதாவது 23 பந்துகளில் 96 ரன்கள். மொத்தம் டாட் பால்கள் நீங்கலாக 126 பந்துகளில் 227 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால் மளமளவென விக்கெட்டுகளை இழந்ததால் ஸ்கோர் எழும்பவில்லை.

 

ரஹ்மத் ஷா சில கண்ணுக்குக் குளிர்ச்சியான ஷாட்களை ஆடினார். 5வது ஒவரில் ஷாஹின் அப்ரீடி குல்பதீன் நயீபையும் ஹஸ்மதுல்லா ஷாஹிதியையும் அடுத்தடுத்து வீழ்த்தினார். ரஹ்மத் ஷாவை இமாத் வாசிம் வீழ்த்த ஆப்கான் அணி 12 ஒவர்களில் 57/3 என்று ரன் விகிதத்தில் 5க்குப் பக்கத்தில் இருந்தது. இக்ரம் அலிகில் (24), அஷ்கர் ஆப்கான் இணைந்து 64 ரன்களை எடுத்து நன்றாக ஆடி வந்தனர். ஆனால் அஷ்கர் ஆப்கானுக்கு ஷார்ட் லெக் பீல்டரைக் கொண்டு வந்து நிறுத்த மேலேறி வந்து அடிக்கலாம் என்று இறங்கி பந்தை விட்டார் பவுல்டு ஆனார். ஆனால் அஷ்கர் ஆப்கான் அதிரடியாகக் கலக்கினார். 35 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் என்று அபாயகரமாக திகழ்ந்தார். இன்னொரு அபாய வீரர் முகமது நபி 33 பந்துகள் கட்டிப் போடப்பட்டு 16 ரன்களில் வஹாப் ரியாஸை புல் ஆடி பைன் லெக்கில் கேட்ச் ஆனார். இதன் பிறகு ஆப்கான் இன்னிங்சில் பெரிதாக ஒன்றுமில்லை 227 ரன்களில் முடிந்தது.

 

ஏப்ரல் 2015க்குப் பிறகு பாகிஸ்தான் அணி 200 மற்றும் அதற்கும் மேற்பட்ட இலக்குகளை விரட்டும் போது மொத்தம் 37 விரட்டல்களில் 23-ல் தோற்று 14ல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது, ஆகவே இதுவும் கம்பி மேல் நடப்பத் போல்தான், ஆனால் பாகிஸ்தான் பேட்டிங் வரிசை முன்பை விட நல்ல தன்னம்பிக்கையுடன் ஆடத்தொடங்கியுள்ளது, பாபர் ஆஸம், ஹாரிஸ் சொஹைல் அந்த அணிக்கு புத்துணர்வை அளித்துள்ளனர், ஆப்கானுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x