

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் பகலிரவு ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளுக்கு 243 ரன்கள் என்று முடிய இந்த உலகக்கோப்பையில் ஷமிக்கு அடுத்த படியாக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார் நியூஸிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்.
50வது ஓவரை வீசிய ட்ரெண்ட் போல்ட் 3வது பந்தில் உஸ்மான் கவாஜாவை (88) பவுல்டு செய்தார். அடுத்த பந்தே மிட்செல் ஸ்டார்க்குக்கு அவரது மருந்தையே அளித்த ட்ரெண்ட் போல்ட் துல்லிய யார்க்கரில் அவரையும் பவுல்டு செய்தார், 2 பந்தில் 2 விக்கெட். பென் ஸ்டோக்ஸுக்கு ஸ்டார்க் வீசிய ஒன்றுமே செய்ய முடியாத யார்க்கர் போல்தான் இதுவும்.
அடுத்ததாக 5வது பந்து பெஹெண்டார்ப் ஆடினார், ஆனால் பந்து மட்டையைக் கடந்து வலது கால்காப்பை சரியாக ஸ்டம்ப் லைனில் தாக்க நடுவர் கையை உயர்த்தினார், பெஹெண்டார்ப் ரிவியூ செல்லுபடியாகவில்லை, ஹாட்ரிக் சாதனை புரிந்தார் ட்ரெண்ட் போல்ட்.
உலகக்கோப்பைகளில் முதல் ஹாட்ரிக் சாதனை புரிந்த நியூஸிலாந்து வீரர் ஆனார் ட்ரெண்ட் போல்ட். 6வது பந்தில் லயனும் அவுட் ஆகியிருப்பார் ஆனால் தப்பினார்.
ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தின் திடுக்கிடும் கேட்ச்கள் அற்புத பீல்டிங் மற்றும் கேப்டன்சியில் 92/5 என்று ஆனது. அதன் பிறகு கவாஜா (88), கேரி (71) சேர்ந்து ஸ்கோரை 199 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். இந்தக் கூட்டணியை உடைத்தார் கேன் வில்லியம்சன். வில்லியம்சன் 7 ஒவர் 25 ரன் முக்கிய விக்கெட். அதன் பிறகு கமின்ஸ் (23 நாட் அவுட்), கவாஜா இணைந்து ஸ்கோரை 243 ரன்களுக்குக் கொண்டு செல்ல அந்த கடைசி ஓவர் வந்தது, இதில் ட்ரெண்ட் போல்ட் அடுத்தடுத்து கவாஜா, ஸ்டார்க், பெஹெண்டார்ப் விக்கெட்டுகளைக் கைப்பற்றி நியூஸிலாந்துக்காக முதல் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.
நியூசி அணியில் போல்ட் 4 விக்கெட்டுகளையும் பெர்குசன், நீஷம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.