Published : 29 Jun 2019 07:57 PM
Last Updated : 29 Jun 2019 07:57 PM

மட்டையிலிருந்து 17மீ தூரம், ரியாக்‌ஷன் நேரம் 0.6 விநாடிகள்: உ.கோப்பை 2019-ன் சிறந்த கேட்ச்? பிரமிக்க வைத்த மார்டின் கப்தில்

லார்ட்ஸ் மைதானத்தில் சனியன்று நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 37வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து பிஞ்ச், வார்னர், ஸ்மித் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை மட்டுமே எடுத்து திணறி வருகிறது.

 

கேப்டன் ஏரோன் பிஞ்ச் 8 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் லேசாக உள்ளே ஸ்விங் செய்த பந்தில் கால்காப்பில் மிடிலுக்கு நேராக வாங்கி எல்.பி.ஆகி வெளியேறினார். 3 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து பெர்கூசனின் அதிவேக எகிறு பந்துக்கு வேறு வழியின்று விக்கெட் கீப்பர் லேதமிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

 

ஸ்டீவன் ஸ்மித் இறங்கினார். 5 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தை ஷார்ட் பிட்ச் பந்தில் சோதிக்க முடிவெடுத்தார் கேன் வில்லியம்சன், ஒரு லெக் கல்லியை நிறுத்தினார். அது மார்டின் கப்தில்.

 

பெர்கூசன் ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை வீச ஸ்மித் விடுவாரா சவாலை ஏற்றுக் கொண்டு முழு மட்டையைக் கொடுத்து ஆக்ரோஷமாக புல் ஷாட் ஆடினார், அது முழு மட்டையில் நன்றாகப் பட்டது, மிஸ் ஹிட்டெல்லாம் கிடையாது,  பந்து விநாடிக்கும் கீழான நேரத்தில் அவ்வளவு வேகத்தில் மார்டின் கப்தில் இடத்திற்குப் பறந்தது. அது லெக் கல்லிதான் மிக அருகிலான ஒரு பீல்டிங் நிலை, ஷாட்டும் படு ஆக்ரோஷமான ஷாட் அது நல்ல வேகத்தில் சென்றது கப்தில் இடது புறம் ஒரு கையை உயர்த்திப் பறந்தார் கையை நீட்டினார் பந்து சிக்கியது. நிச்சயம் இது இந்த உலகக்கோப்பையின் மிகச்சிறந்த கேட்ச்தான்.

 

ஏனெனில் டிவி ஒளிபரப்பு கிராஃபில் பேட்ஸ்மெனிடமிருந்து 17m தூரத்தில்தான் கப்தில் இருந்தார், பந்துக்கான ரியாக்‌ஷன் நேரம் 0.6 விநாடிகள் என்று காட்டியது. அதி ஆக்ரோஷ புல் ஷாட், கேட்ச் பிடிக்கவே முடியாத அசாத்தியமான கேட்சை எடுத்தார் கப்தில்.

 

இவரது இந்த கேட்ச் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  தற்போது ஆஸ்திரேலியா 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கவாஜா 32 ரன்களும், கேரி 4 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

 

கப்தில் கேட்ச் பிரமிப்பூட்டும் கேட்ச். ஸ்மித்தை வீழ்த்த அருமையான, சமயோசிதமான முடிவு, கேன் வில்லியம்சன், பெர்கூசன், கப்தில் கூட்டணியில் ஆஸி.முன்னாள் கேப்டன் சரிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x