Last Updated : 29 Jun, 2019 01:21 PM

 

Published : 29 Jun 2019 01:21 PM
Last Updated : 29 Jun 2019 01:21 PM

எங்களுக்கும் சிறிய அணிகளுடன் தொடக்கத்தில் போட்டி இருந்திருந்தால் வென்றிருப்போம்: டூபிளெசிஸ் ஆதங்கம்

எங்களுக்கும் தொடக்கத்தில் சிறிய அணிகளுடன் போட்டி இருந்திருந்தால், வெற்றி பெற்றிருப்போம், இதுபோன்ற கசப்பான தோல்விகள் அமைந்திருக்காது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெசிஸ் ஆதங்கம் தெரிவித்தார்.

உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி வெளியேறி விட்ட நிலையில், ஒருமுறைக்காகவே நேற்று லீக் ஆட்டத்தில் மோதியது.

செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 37.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்க அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகள், 5 தோல்வி என 5 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியது. இலங்கை அணி 7 போட்டிகளில் 2 வெற்றிகள், 3தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

இந்த போட்டியில் 2-வது விக்கெட்டுக்கு  175 ரன்கள் சேர்த்து ஆம்லா 80 ரன்களிலும், டூபிளெசிஸ் 96 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்த வெற்றி குறித்து தென் ஆப்பிரிக் கேப்டன் டூபிளெசிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்களுக்கும் தொடக்கத்தில் எளிதான, சிறிய அணிகளுடன் மோதுமாறு போட்டி அட்டவணை அமைத்திருந்தால் நாங்களும் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், முதல் வாரத்திலேயே 3  போட்டிகளும் மிகப்பெரிய அணிகளுடன் மோதினோம்.

இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் மோதி தோல்வியைச் சந்தித்த நம்பிக்கை இழந்த நிலையில், வங்கதேசத்திடமும் தோல்வி அடைந்தோம். முதல்வாரமே மிகக்கடினமாகத்தான் அமைந்தது. ஆனாலும் நாங்கள் விளையாடினோம். இதுபோன்ற அட்டவணை அமைந்தால் எந்த அணிக்கும் கடினமாகத்தான் இருக்கும், அதற்கு தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடுவது அவசியம்.

நாம் தொடக்க போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால், நம்பிக்கை ஏற்பட்டு, அடுத்தடுத்த கட்டத்துக்கு அணி செல்லும். அனைத்தும் சாதகமான முறையில் முடியும். நன்றாக விளையாட வேண்டும் எனும் எதிர்பார்ப்புடன் நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் நாம் எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியம்.

முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தோம், இதனால் எங்கள் தோள்களின் மீது அதிகமான சுமை வந்தது. அதைச் சமந்து அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியது இருந்தது. இந்த வெற்றியை நாங்கள் அணியுடன் இணைந்து கொண்டாடுகிறோம். இந்த வெற்றி அடுத்த போட்டியில் இன்னும் உற்சாகமாக  விளையாட துணை  புரியும்.

இவ்வாறு டூபிளெசிஸ் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x