Published : 30 Aug 2017 10:39 AM
Last Updated : 30 Aug 2017 10:39 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலப்பை வீழ்த்தினார் ஷரபோவா- ஆடவர் பிரிவில் மரின் சிலிச், ஜிவெரேவ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், ரஷ்யாவின் மரியா ஷரபோவாவிடம் போராடி தோல்வியடைந்தார்.

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் நேற்று முன்தினம் நியூயார்க் நகரில் தொடங்கியது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், 2006-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனும் 146-ம் நிலை வீராங்கனையுமான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை எதிர்த்து விளையாடினார்.

சுமார் 2 மணி நேரம் 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஷரபோவா 6-4., 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதுவரை சிமோனா ஹாலப்புக்கு எதிராக 7 முறை மோதியுள்ள ஷரபோவா அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளார். 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள அவர், தனது 2-வது சுற்றில் தரவரிசையில் 59-வது இடத்தில் உள்ள ஹங்கேரி வீராங்கனை பபோஸை எதிர்கொள்கிறார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் கால் இறுதியில் செரீனாவிடம் வீழ்ந்த ஷரபோவா, அதன் பின்னர் ஊக்க மருந்து விவகாரத்தில் 15 மாதங்கள் தடைக்கு பின்னர் விளையாடும் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடராக அமெரிக்க ஓபன் அமைந்துள்ளது. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஷரபோவா, கடந்த ஏப்ரல் மாதம் முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார். பிரெஞ்சு ஓபனில் அவருக்கு வைல்டு கார்டு மறுக்கப்பட்ட நிலையில், விம்பிள்டன் தொடரில் காயம் காரணமாக பங்கேற்காமல் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோன்டா தோல்வி

மகளிர் ஒற்றையர் பிரிவு மற்ற ஆட்டங்களில் 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-0, 6-3 என்ற நேர் செட்டில் 64-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் லெப்சென்கோவையும், 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் சுலோவேக்கியாவின் விக்டோரியா குஸ்மோவாவையும், 13-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா 7-5, 7-5 என்ற நேர் செட்டில் செர்பியாவின் ஜெலினா ஜன்கோவிச்சையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

5-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-1, 7-5 என்ற நேர் செட்டில் 133-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் மைஹேலா புஸர்நெஸ்குவையும், 11-ம் நிலை வீராங்கனையான சுலோவேக்கியாவின் டொமினிகா சிபுல்கோவா 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 87-ம் நிலை வீராங்கனையான சுலோவேக்கியாவின் ஜனா செப்லோவாவையும் தோற்கடித்து 2-வது சுற்றில் கால் பதித்தனர். 7-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டா 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் போராடி 78-ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் அலெக்சான்ட்ரா கிருனிக்கிடம் தோல்வியடைந்தார்.

2-வது சுற்றில் சிலிச்

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் 5-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் 6-4, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் 105-ம் நிலை வீரான அமெரிக்காவின் சாண்ட்கிரெனையும், 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 7-6, 7-5, 6-4 என்ற நேர் செட்டில் 168-ம் நிலை வீரரான பார்படாஸின் தரியன் கிங்கையும், 10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்நர் 6-1, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 65-ம் நிலை வீரரான பிரான்சின் ஹியூஸ் ஹெர்பர்ட்டையும், 8-ம் நிலை வீரரான பிரான்சின் சோங்கா 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 87-ம் நிலை வீரரான ருமேனியாவின் மாரிஸ் கோபிளையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

சாதனை

அமெரிக்க ஓபன் தொடக்க நாள் போட்டியை 61,839 ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து நேரில் கண்டுகளித்து சாதனை படைத்துள்ளனர். இந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ம் தேதி நடைபெற்ற தொடக்க நாள் ஆட்டத்தை 61,392 பேர் நேரில் கண்டுகளித்ததே சாதனையாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x