

சச்சின் சுயசரிதை கிளப்பியுள்ள சர்ச்சை இப்போது முற்றியுள்ளது. கிரெக் சாப்பல் பற்றி சச்சின் கூறியது முற்றிலும் உண்மைதான். சச்சின் போன்ற நம்பகமான ஒருவர் உண்மையை இப்படி உடைத்திருப்பது பாராட்டுக்குரியது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் திராவிடால் அப்போது பயிற்சியாளர் கிரெக் சாப்பலை கட்டுப்படுத்த முடியவில்லை, என்கிறார் கங்குலி.
"நான் உண்மையில் அந்தக் காலகட்டத்திற்குள் செல்ல விரும்பவில்லை. அது எப்படி இருந்தது என்பது அப்போது ஆடப்பட்ட போட்டிகளின் முடிவுகளே தெரிவிக்கும். கிரெக் சாப்பல் பயிற்சிக் காலம் இந்திய கிரிக்கெட்டின் மிக மோசமான காலம். குறிப்பாக எனக்கு மிக மோசமாக அமைந்தது. பொய்கள் மேல் பொய்கள், பிறகு 6 மாதங்கள் சென்று ராகுல் திராவிடை நீக்கி விட்டு சச்சினை கேப்டனாக்க விரும்பியுள்ளார். இதுவே அவர் எப்படி தனது பயிற்சியாளர் பணியை செய்தார் என்பதை எடுத்துரைக்கிறது.
2007 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியதைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. நான் அணிக்குள் மீண்டும் வந்த போது நீண்ட நாட்கள் கழித்து இப்படி இப்படியெல்லாம் விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று ராகுலிடம் விளக்கினேன். அவர் தானும் இவற்றையெல்லாம் அறிவேன், ஆனால் கிரெக் சாப்பலை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.
2005 நவம்பர்-டிசம்பரில் நான் எனது கேப்டன்சியை இழந்தேன். ராகுல் கேப்டன் ஆனார். இவரை கேப்டனாக்கிய 8 மாதங்களுக்குப் பிறகு சச்சினை கேப்டனாக்க முயன்றிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் எவ்வளவு சேதத்தை விளைவித்தார் என்பதை இது அறிவுறுத்துகிறது. இது அவருடைய குணச்சித்திரத்தை எடுத்துக்காட்டுகிறது. கங்குலியாக இருந்தாலும் திராவிடாக, சச்சினாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சாப்பல் என்ற மனிதரை நம்பத்தகுந்தவர் இல்லை என்றே கூறுவார்கள்.
சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதை நூலை எழுதியுள்ள விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டிற்கு சச்சின் பங்களிப்பு அபரிமிதமானது. அவருடைய சுயசரிதை இன்று பலரது கண்களையும் திறக்கும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்தவற்றை உள்ளது உள்ளபடியே கூறியுள்ளார் சச்சின், இது பற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அப்போது என்னைப் பற்றி நிறைய விஷயங்கள் எழுதப்பட்டன, நான் என் கேப்டன்சியை இழந்தேன். பிறகு அணிக்குள் வந்தேன் விளையாடினேன். ஆனால் அந்தக் காலக்கட்டம் எனக்கு நன்றாக அமையவில்லை. சச்சின் போன்ற ஒரு நம்பகமானவர் இதைப் பற்றி எழுதியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருநாள் எனக்கு நடந்ததையும் நான் எழுதுவேன். அப்போது ஜிம்பாவே தொடர் முதல் அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுக்கு நான் எதுவும் பேசாமல் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். இப்போது சச்சின் அதனைச் செய்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றி கங்குலி பொரிந்து தள்ளியுள்ளார்.