Last Updated : 26 Aug, 2017 09:52 AM

 

Published : 26 Aug 2017 09:52 AM
Last Updated : 26 Aug 2017 09:52 AM

முத்தரப்பு கால்பந்து போட்டி: இந்திய அணி தொடரை வென்றது

முத்தரப்பு கால்பந்து போட்டியில் செயின்ட் கீட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இதன்மூலம் இந்த கால்பந்து தொடரை இந்திய அணி வென்றது

இந்தியா, செயின்ட் கீட்ஸ், மொரீஷியஸ் ஆகிய அணிகள் பங்கேற்ற முத்தரப்பு கால்பந்து போட்டி மும்பையில் நடந்தது. இந்த கால்பந்து தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, மொரீஷியஸ் அணியை வென்றிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி செயின்ட் கீட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் செயின்ட் கீட்ஸ் அணியின் கோல் எல்லைக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் அவர்களின் கோல் அடிக்கும் முயற்சிகளை செயின்ட் கீட்ஸ் வீரர்கள் சாதுர்யமாக தடுத்தனர்.

38-வது நிமிடத்தில் ஜாக்கிசந்த் சிங் ஒரு கோல் அடித்து இந்திய அணிக்கு 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார். ரோலின் பார்கஸ் பாஸ் செய்த பந்தை, தலையால் முட்டி அவர் கோல்போஸ்ட்டுக்குள் திணித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தது. 2-வது பாதி ஆட்டத்தின்போது செயின்ட் கீட்ஸ் வீரர்கள், ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

71-வது நிமிடத்தில் அமரி காவன் அடித்த கோலின் மூலம் செயின்ட் கீட்ஸ் அணி, ஆட்டத்தை 1-1 என்று சமன் செய்தது. இதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. கடந்த 9 போட்டிகளாக தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவந்த இந்திய அணியின் வெற்றிப்பயணம் இத்துடன் முடிவுக்கு வந்தது.

இப்போட்டி டிராவில் முடிந்தபோதிலும், மொரீஷியஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றதால், இந்திய அணி முத்தரப்பு கால்பந்து தொடரை வென்றது. இந்தியா மற்றும் மொரீஷியஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்த செயின்ட் கீட்ஸ் அணி, 2-வது இடத்தைப் பிடித்தது. அடுத்ததாக ஆசிய கோப்பைக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்திய அணி மக்காவு அணியை எதிர்த்து செப்டம்பர் 5-ம் தேதி ஆடுகிறது.

இப்போட்டி குறித்து நிருபர்களிடம் கூறிய இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டாண்டைன், “செயின்ட் கீட்ஸ் அணிக்கு எதிராக கோல் அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை இந்திய வீரர்கள் வீணடித்தனர். வெற்றிபெறக்கூடிய இப்போட்டி டிராவில் முடிந்தது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த ஆட்டத்தின்மூலம் இந்திய அணி சில பாடங்களை கற்றுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x