

டெல்லியில் நடைபெறும் துலிப் கோப்பை இறுதிப் போட்டியில் 2-வது இன்னிங்ஸிலும் சதம் எடுத்த லோகேஷ் ராகுல், தெற்கு மண்டல அணியை வெற்றிக்கு அருகில் இட்டுச் சென்றுள்ளார்.
4-ஆம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 1 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னமும் 117 ரன்கள் தேவை என்ற நிலையில் லோகேஷ் ராகுல் 121 ரன்களுடனும் தமிழக வீரர் பாபா அபராஜித் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக மத்திய மண்டலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸ்ட்டின் அபாரமான எதிர்தாக்குதல் முறையில் எடுத்த 112 ரன்களால் 403 ரன்களை எடுத்தது.
முதல் இன்னிங்ஸில் 185 ரன்களை எடுத்த லோகேஷ் ராகுல், 2-வது இன்னிங்ஸில் 132 பந்துகளில் 12 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 121 ரன்களுடன் களத்தில் நிற்கிறார்.
இலக்கைத் துரத்திய போது ஈஷ்வர் பாண்டேயை 3 பவுண்டரிகள் விளாசி அதிரடித் தொடக்கம் கொடுத்தார் ராகுல். இவரது அனாயசமான ஆட்டத்தினால் உத்தப்பா நிதானப் போக்கைக் கடைபிடிக்க வேண்டியதாயிற்று. உத்தப்பா பிறகு 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன் பிறகும் ராகுலின் மட்டையிலிருந்து பவுண்டரிகள் வந்து கொண்டிருந்தன. ஜலஜ் சக்சேனா என்ற ஸ்பின்ன்ரை மிட்விக்கெட்டில் சிக்சர் விளாசிய ராகுல், பிறகு இரு முறை ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரியும் விளாசினார்.
ராகுலின் தொடர்ச்சியான இந்த சதத்தை இந்திய அணித் தேர்வாளர்களான சபா கரீம், மற்றும் விக்ரம் ராத்தோர் ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆஸ்திரேலியா தொடருக்கு லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு நிச்சயம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
லோகேஷ் ராகுல் வெற்றி இலக்கான 301 ரன்களை கிட்டத்தட்ட ஒன்றுமில்லாமல் செய்தார். காரணம் ஆக்ரோஷமான அவரது அணுகுமுறையே. மத்திய மண்டலம் 301 ரன்கள் இலக்கை நிர்ணயித்த பிறகு வெற்றிக்கு வாய்ப்பிருந்ததாகவே கருதியது. ஆனால் லோகேஷ் ராகுல் அதனை இதுவரை சிறப்பாக முறியடித்துள்ளார்.
“அடுத்தடுத்து 2 சதங்கள் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் எனது குறி மொத்த இலக்கு மீது உள்ளது. இந்தத் தொடரை வெல்வதில் முழு கவனம் செலுத்தியுள்ளேன். இலக்கை எட்டும் வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல விரும்புகிறேன்” என்கிறார் இந்த இளம் தொடக்க வீரர்.