Last Updated : 12 Nov, 2014 03:41 PM

 

Published : 12 Nov 2014 03:41 PM
Last Updated : 12 Nov 2014 03:41 PM

சத்தீஸ்கர் கருத்தடை சிகிச்சை மரணம்: நேரடியாக வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் யோசனை

சத்தீஸ்கரில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 11 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

சத்தீஸ்கரின் பிலாஸ்ப்பூரில் அரசு நடத்திய கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் உடல்நலக்குறைவால் பலியான பெண்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 49 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த அதிர்ச்சி சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொற்றுக் கோளாறு ஏற்பட்டதே இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சத்தீஸ்கர் சுகாதாரத் துறை துணைத் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்

இந்த நிகழ்வின் எதிரொலியால், பிலாஸ்புர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் ஆர்.கே.பாங்கே, லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.கே. குப்தா, மாவட்ட குடும்ப நலத் திட்ட அமைப்பாளர் கே.சி. உராவோ, டகாட்புர் ஒன்றிய மருத்துவ அலுவலர் பிரமோத் திவாரி ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தாமாக முன்வந்து வழக்கை ஏற்று விசாரணை நடத்த வேண்டும் என்ற வழக்கறிஞர் ஒருவரின் கோரிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு இன்று நிராகரித்தது.

"சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்புகொண்டு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க முடியாது. பத்திரிகை செய்திகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியதற்கு பதிலாக, இதுதொடர்பாக நேரடியாக மனு தாக்கல் செய்திருக்கலாம்" என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x