

சச்சின் டெண்டுல்கர் என்றாலே அவர் பயன்படுத்தும் அதிக எடை பேட் பற்றிய நினைவு வராமல் இருக்க முடியாது. கிளைவ் லாய்ட், இந்தியாவின் சந்தீப் பாட்டீல் ஆகியோர் பேட்களும் அதிக எடை உள்ளவை என்று கூறப்படுவதுண்டு.
ஆனால் லாய்ட், சந்தீப் பாட்டீல் ஆகியோர் ஓரளவுக்கு நல்ல உயரம் மற்றும் வலுவான உடற்கட்டு உடையவர்கள். சச்சின் உயரமும் அதிகம் கிடையாது. 18,19 வயதில் ஒருவருக்கு அவ்வளவு எடை மிகுந்த பேட்டை பிடித்து ஆடக்கூடிய உடற்கட்டும் இல்லாதவர். இந்த நிலையில் அவர் எடை கூடுதலான பேட்டைக் கொண்டு ஆடியது கிரிக்கெட் நிபுணர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இது அவர் தனது சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’-யில் எழுதியிருப்பதாவது:
"நான் கனரக பேட்களை பயன்படுத்தி வந்தேன், சில சமயங்களில் எடை குறைவான பேட்களைப் பயன்படுத்தவும் ஊக்கம் காட்டினேன், முயற்சி செய்து பார்த்தேன், ஆனால் எடைகுறைவு பேட்களில் ஆடும் போது நான் வசதியாக உணரவில்லை, ஷாட்களை ஆடும் போது ஒட்டுமொத்த மட்டை சுழற்சியும் பேட்டிங் எடையைப் பொறுத்து அமைந்திருந்தது. எனவே குறைந்த எடை பேட்கள் எனக்கு சரிப்பட்டு வரவில்லை.
நான் டிரைவ் ஆடும் போது ஷாட்டில் தாக்கம் அதிகமாக பேட்டையின் எடை முக்கியப் பங்கு வகித்தது. எடை அதிகமான பேட் எனது டைமிங் சம்பந்தப்பட்ட ஒன்று.
என்னைப் பொறுத்தவரை பேட் என்பது எனது கையின் நீட்சியாகும். பேட் என்பது உங்கள் கையின் நீட்சியாக மாறிய நிலைக்கு நீங்கள் வந்தடைந்த பிறகு மட்டையை மாற்றுவது கிரிப்பை மாற்றுவது என்பது ஏன்? நான் பேட்டிங் செய்யும் போது எனது கவனம் நான் வசதியாக உணர வேண்டும் என்பதே.
நான் வசதியாக உணரும்போது, எந்த மைதானத்தில் ஆடுகிறேன், எதிரணியினர் யார் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. பல்வேறு சூழ்நிலைக்குத் தக்கவாறு பேட்டை மாற்றிக் கொண்டிருந்தால் வசதியாக உணரமாட்டோம் என்றே நான் கருதிகிறேன்.
அதே போல் நான் பேட்டைப் பிடித்திருக்கும் விதம் பற்றியும் நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பேட் கைப்பிடியில் கீழ்ப்பகுதியில் பிடித்து ஆடுவேன். நான் என் அண்ணனுடன் ஆடும் போது, அவர் என்னை விட 10 வயது மூத்தவர். நான் அவரது பேட்டில்தான் ஆட வேண்டும், அவரது பெரிய பேட்டை நான் கைப்பிடியின் கீழ்ப்பகுதியில் பிடித்துதான் ஆடுவேன். அப்போதுதான் அந்த எடையை நான் தூக்க முடியும். பேட் கைப்பிடியின் அடிப்பகுதியில் பிடிப்பது என்பது எனது சிறு வயதுப் பழக்கம்.
சில பயிற்சியாளர்கள் எனது இந்தப்பிடியை மாற்றக் கூறினர். நானும் செய்து பார்த்தேன், ஆனால் எனக்கு வசதியாக இருக்கவில்லை. அதை விடுத்து கைப்பிடியில் சற்றே மேலே பிடித்தால் எனக்கு இயல்பானதாக அமையவில்லை.
அதற்காக நான் பரிசோதனைகளைச் செய்யவில்லை என்று அர்த்தமல்ல, எனது பேக்லிப்ட் காலத்தில் மாறிவந்திருக்கிறது.
பவுலர் முனையில் என் கவனம் இருக்கும் போது நான் சிறப்பாக பேட் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பவுலர்களாகட்டும் பேட்ஸ்மென்களாகட்டும் எதிர் முனையில் கவனம் இருக்க வேண்டும், அதாவது பேட் செய்யும் போது பவுலர் என்ன நினைக்கிறார், அடுத்து என்ன வீசுவார் என்பதில் கவனம் செலுத்தவேண்டும், அதேபோல் பேட்ஸ்மென் என்ன நினைக்கிறார், அடுத்த ஷாட்டை அவரை என்ன மாதிரி ஆட வைக்க வேண்டும், எந்த லெந்த்தில் வீசினால் அவரை வீழ்த்த முடியும் என்பதை யோசிக்க வேண்டும்.
மாறாக உங்கள் உத்தி பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால் அது சரிவராது. உதாரணமாக ஒரு பவுலர் நோ-பால் பற்றிய கவலையில் வீசிக் கொண்டிருந்தால் அவரால் ஒரு போதும் லைன் மற்றும் லெந்த்தில் வீச முடியாது.
கிரிக்கெட் ஆட்டம் என்பது சிறப்பாக ஆடப்படும் தருணம் என்பது என்னைப் பொறுத்தவரை நமது மனம் எதிர்முனையில் இருக்கும் போதுதான் என்றே நான் கருதுகிறேன்.”
இவ்வாறு எழுதியுள்ளார் சச்சின்.